உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அரசு திட்டங்களில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடையில்லை | DMK | ADMK | CV Shanmugam | Supreme Court

அரசு திட்டங்களில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடையில்லை | DMK | ADMK | CV Shanmugam | Supreme Court

தமிழக அரசு தற்போது துவங்கும் புதிய திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தி வருகிறது. அண்மையில் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் என்ற பெயரில் புதிய திட்டங்களை துவங்கியது. அரசு திட்டங்களில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி, அதிமுக எம்பி சிவி சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், தமிழக அரசு துவங்கும் புதிய திட்டங்கள் மற்றும் அமலில் உள்ள பழைய திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில், முதல்வரின் புகைப்படம் இடம்பெற அனுமதி அளித்தது. ஆனால் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதித்தது. முன்னாள் முதல்வர் படம், ஆளுங்கட்சியின் கொள்கை, சித்தாந்த தலைவர்களின் புகைப்படங்களையும் அரசு திட்டங்களில் பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், என்.வி.அன்ஜாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோகத்கி, பி.வில்சன், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அரசியல் தலைவர்களின் பெயரில் நாடு முழுதும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி இருக்கும் போது உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, அரசியல் ரீதியானது என தமிழக அரசின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ஐகோர்ட் உத்தரவுக்கு, நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பற்றி தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்த மூன்றே நாளில் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது ஏன்? தலைவர்கள் பெயரை வைக்கக்கூடாது, மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது என கூறினால் அனைத்து திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஸ்டாலின் பெயரிலான திட்டத்தை மட்டும் எதிர்ப்பதை ஏற்க முடியாது. ஒரு குறிப்பிட்ட திட்டத்தை மட்டும் எதிர்த்து வழக்கு தொடர்ந்திருப்பது உள்நோக்கம் கொண்டது. உங்கள் அரசியல் மோதலை தீர்ப்பதற்காக கோர்ட்டை பயன்படுத்தக்கூடாது. அரசியல் சண்டைகள் தேர்தல் களத்தில் தான் இருக்க வேண்டுமே தவிர, கோர்ட்களில் இருக்கக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை எனக்கூறி, சிவி சண்முகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். கோர்ட் நேரத்தை வீணடித்ததற்காக சிவி சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தனர். இந்த அபராத தொகையை ஒரு வாரத்திற்குள் சண்முகம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

ஆக 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை