200+ தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என திமுகவினர் மகிழ்ச்சி! DMK DMDK Alliance | Premalatha
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்ததால், 200 தொகுதிகளில் வெற்றி என்ற முதல்வரின் முயற்சி எளிதாகும் என, தி.மு.க.வினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது குறித்து, தி.மு.க. வட்டாரங்கள் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, தே.மு.தி.க. உறுதியாக வரும் என எதிர்பார்த்த அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. வலிமையான கூட்டணி அமையும் என எதிர்பார்த்தவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்து உள்ளது. கூட்டணி குறித்து முடிவெடுக்காமல் இருந்த தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா, வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தி.மு.க. கூட்டணிக்கு வந்துள்ளார். ஈஷா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில், முன்னாள் அமைச்சர் வேலுமணியோடு பிரேமலதா பங்கேற்றதை வைத்து, அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வரும்; தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாகும் என செய்தி பரவியது. இந்நிலையில், பிரேமலதா எடுத்த முடிவு, அந்தக் கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்ததால், அந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அடுத்து 2019, 2020ம் ஆண்டுகளில், தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக வாக்குறுதி அளித்து தரவில்லை. இது, தே.மு.தி.க.விடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.