ஓய்வு பெறும் உயர் அதிகாரிகள் சுயசரிதை எழுத கடிவாளம் போடுகிறது அரசு? Government Higher Official |
அரசு மற்றும் ராணுவத்தில் உயர்ந்த பதவிகளில் இருந்து ஓய்வு பெறும் அதிகாரிகள், தங்கள் சுயசரிதை மற்றும் பணிக்கால அனுபவங்களை எழுதி புத்தகமாக வெளியிடுவதற்கு, கடிவாளம் போட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு கிளப்பிய பிரச்னையால், லோக்சபா அலுவல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 2019 முதல் 2022 வரை, இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக பணியாற்றிய ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, தன் சுயசரிதை புத்தகத்தை, ஃபோர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி என்ற பெயரில் எழுதி உள்ளார். அதில் கடந்த 2020ல் இந்தியா - சீனா எல்லை பிரச்னையின் போது, மத்திய அரசு எப்படி செயல்பட்டது என்பது குறித்து விளக்கமாக எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. பென்குவின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பதிப்பகம் வெளியிட இருந்த இந்த புத்தகத்துக்கு, ராணுவ அமைச்சகம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இருப்பினும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படும் சில வரிகளை எடுத்து பார்லிமென்ட்டில் ராகுல் பேசினார். மத்திய அரசு குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் கடுமையான விமர்சனங்களை அவர் முன் வைத்தார். வெளியாகாத அந்த புத்தகத்தின், டிஜிட்டல் வடிவ நகல்கள் அனைத்துமே, சமூக ஊடகங்களில், காங்கிரஸ் எம்.பி.க்களால் பகிரப்பட்டன.