உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 7 நாள் கெடு விதித்த தலைமை தேர்தல் கமிஷனர் | Gyanesh Kumar | Chief Election Commissioner | ECI

7 நாள் கெடு விதித்த தலைமை தேர்தல் கமிஷனர் | Gyanesh Kumar | Chief Election Commissioner | ECI

7 நாள் கெடு விதித்த தலைமை தேர்தல் கமிஷனர் | Gyanesh Kumar | Chief Election Commissioner | ECI | Rahul allegations நாடு முழுதும் ஓட்டு திருட்டு நடப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியிலும் முறைகேடுகள் நடப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளது. இதற்கெல்லாம் தேர்தல் கமிஷன் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் இன்று விளக்கம் அளித்தார். ஒவ்வொரு கட்சியும் தேர்தல் கமிஷனில் பதிவு செய்தே உருவாகின்றன என்பது அனைவருக்கும் தெரியும். பிறகு எப்படி கட்சிகளிடையே தேர்தல் கமிஷன் பாகுபாடு காட்ட முடியும்? தேர்தல் கமிஷனை பொறுத்தவரை அனைவரும் சமம். யார் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தேர்தல் கமிஷன் அதன் அரசியலமைப்பு கடமையில் இருந்து பின்வாங்காது. தேர்தல் கமிஷனின் கதவுகள் அனைவருக்கும் எப்போதும் சமமாக திறந்திருக்கும். அடிப்படை யதார்த்தத்தை புறக்கணித்து குழப்பத்தை பரப்ப முயற்சி செய்வது என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். உண்மை என்னவென்றால், படிப்படியாக பீகாரின் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி முழுமையாக வெற்றிபெற அனைத்து தரப்பினரும் கடினமாக உழைக்கின்றனர். பீகாரின் 7 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தல் கமிஷனுடன் நிற்கும்போது, அதோடு வாக்காளர்களின் நம்பகத்தன்மை குறித்தும் எந்த கேள்வியும் எழுப்ப முடியாது. லோக்சபா தேர்தல் பணியில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பூத் ஏஜென்டுகள், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் பூத் ஏஜென்டுகள் இருந்துள்ளனர். இவ்வளவு வெளிப்படையான செயல்பாட்டில், இவ்வளவு மக்கள் முன்னிலையில், எந்த வாக்காளரும் ஓட்டுகளை திருட முடியுமா? சில வாக்காளர்கள் இருமுறை ஓட்டுப் போட்டதாக சொன்ன குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்டால் கொடுப்பது இல்லை. பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் கமிஷனும், வாக்காளர்களும் பயப்பட மாட்டார்கள். ஏழைகள், பணக்காரர்கள், முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் உட்பட அனைத்து வாக்காளர்களுடனும் தேர்தல் கமிஷன் அச்சமின்றி ஒரு பாறை போல எந்த பாகுபாடும் இல்லாமல் நிற்கிறது, தொடர்ந்து நிற்கும். தேர்தல் அதிகாரி முடிவுகளை அறிவித்த பிறகும், 45 நாட்களுக்குள் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் தேர்தலை எதிர்த்து மனு தாக்கல் செய்யலாம் என்ற விதி சட்டத்தில் உள்ளது. ஆனால் இன்று, இத்தனை நாட்களுக்குப் பிறகு, இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சொல்வதன் பின்னணியில் உள்ள நோக்கத்தை வாக்காளர்களும், நாட்டு மக்களும் புரிந்துகொண்டுள்ளனர். இந்திய அரசியலமைப்பின் படி, இந்திய மக்கள் மட்டுமே எம்.பி, எம்எல்ஏ தேர்தலில் வாக்களிக்க முடியும். மற்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அந்த உரிமை இல்லை. அவர்கள் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்பி இருந்தால், சிறப்பு திருத்தத்தின்போது போது, தங்கள் தேசியத்தை நிரூபிக்க சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் விசாரணைக்குப் பிறகு அவர்களின் பெயர்கள் நீக்கப்படுகிறது. அரசியல் கட்சிகளிடம் இருந்து பல புகார்கள் வந்த பிறகே சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி நடக்கிறது. நாட்டில் இதுவரை 10 முறைக்கு மேல் இந்த பணி நடந்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் வாக்காளர் பட்டியலை சீர்படுத்துவதுதான். ஆனால் சிலர் இது ஏன் இவ்வளவு அவசரமாக செய்யப்படுகிறது என்று தவறாக வழிநடத்துகிறார்கள்? தேர்தலுக்கு முன்போ அல்லது பின்னரோ வாக்காளர் பட்டியலை திருத்த வேண்டியது தேர்தல் கமிஷனின் சட்டப்பூர்வ பொறுப்பு. நீங்கள் எதையாவது 10 முறை, 20 முறை சொல்லிக் கொண்டே இருந்தால், அது உண்மையாகிவிடாது. சூரியன் கிழக்கில் மட்டுமே உதிக்கிறது. யாரோ ஒருவர் சொல்வதால் அது மேற்கில் உதிக்காது. குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரமாணப் பத்திரம் கொடுக்கப்பட வேண்டும் அல்லது நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வேறு வழியே இல்லை. 7 நாட்களுக்குள் பிரமாண பத்திரம் கிடைக்காவிட்டால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றுதான் அர்த்தம் எனவும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் கூறினார்.

ஆக 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ