பஹல்காம் அட்டாக்: மோடி மீது கார்கே போட்ட பழி india vs pakistan | pahalgam attack | kharge vs modi
கர்நாடகாவில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது மீண்டும் பகிரங்கமாக பழி சுமத்தினார். கார்கே பேசியது: பிரதமர் மோடி ஏப்ரல் 17ம் தேதி காஷ்மீர் செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக உளவு அமைப்புகள் எச்சரித்தன. இதைத்தொடர்ந்து சத்தமின்றி அவரது காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்பட்டது. மோடிக்கு இந்த விஷயம் தெரியும் தானே. அப்படி தெரிந்து இருந்தால், ஏன் மக்களுக்கு இது பற்றி எச்சரிக்கவில்லை. மக்களை எச்சரித்து இருந்தால் 26 அப்பாவி உயிர்களை காப்பாற்றி இருக்க முடியுமே என்று கார்கே சொன்னார். இதே குற்றச்சாட்டே ஏற்கனவே கார்கே சுமத்தி இருந்தார். இதற்கு பாஜவினர் அப்போதே பதிலடி கொடுத்தனர். கர்நாடக கூட்டத்தில், பாகிஸ்தானுடன் இந்தியா நடத்திய பயங்கர யுத்தத்தை சின்ன போர் என்றும் மறைமுகமாக கார்கே சாடினார். ‛அங்கும் இங்கும் சிறிய போர் நடந்தது. இதில் இந்தியாவின் பதிலடியை பாகிஸ்தான் குறைத்து மதிப்பிடுகிறது. சீனாவின் தயவுடன் அந்த நாடு செயல்படுகிறது என்றார். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு மோடி பீகார் சென்றதையும் கார்கே கடுமையாக விமர்சித்தார். பஹல்காமில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டதும், டில்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொள்ளாத மோடி, பீகாரில் நடந்த அரசியல் மாநாட்டில் மும்முரமாக பங்கேற்றார். இந்த விவகாரத்தில் 2 அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. ஒன்றில் கூட பிரதமர் பங்கேற்கவில்லை. ஒரு வேளை அந்த கூட்டங்களை நாங்கள் புறக்கணித்து இருந்தால், தேச துரோகிகள் என்று அழைக்கப்பட்டு இருப்போம். ஆனால் மோடி பங்கேற்காமல் போனால், அது தேச பக்தி என்று முத்திரை குத்துப்படுகிறது. ஏன் இப்படி ஒரு இரட்டை நிலைப்பாடு என்று கேள்வி எழுப்பினார். ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி நட்பு நாடுகளுக்கு விளக்கம் அளிக்க, அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவை பிரதமர் அறிவித்தார். ஆனால் இது பற்றி எங்களிடம் எதுவும் ஆலோசிக்கவில்லை. இருப்பினும் நாட்டின் நலனுக்காக நாங்கள் அதை எதிர்க்கவில்லை. எங்கள் கட்சியினரும் அந்த குழுவினரோடு மற்ற நாடுகளுக்கு செல்கின்றனர். ஆனால் எங்களை பொறுத்தவரை, அரசியல் ஆதரவு பெறுவதை விட, நாட்டை பாதுகாப்பதே எங்கள் முன்னுரிமை என்று கார்கே சொன்னார். கார்கேவின் இந்த பேச்சை பாஜவினர் கடுமையாக கண்டித்து வருகின்றனர். ‛ஆபரேஷன் சிந்தூரை ஒரு சிறிய போர் என்று கார்கே சொல்கிறார். நம் ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகளின் 9 முகாம்களை தாக்கி 100 பயங்கரவாதிகளை கொன்றதை ராகுலும் கார்கேவும் ஏற்கவில்லையா? பாகிஸ்தான் தாக்குதலுக்கு நாம் கொடுத்த பதிலடியில் 11 ராணுவ தளங்கள் தகர்க்கப்பட்டன. இப்போதும் பாகிஸ்தான் வலி தாங்க முடியாமல் அழுகிறது. இருந்தும் இந்தியா நடத்தியதை சிறிய போர் என்று சொல்கிறீர்களே, நம் ராணுவத்தின் துணிச்சலை இப்படி தான் கொச்சைப்படுத்துவீர்களா என்று பாஜ எம்பி சம்பித் பத்ரா சாடி உள்ளார்.