முட்டாள்தனத்தின் உச்சம்: நேருவை விமர்சித்த காங் எம்பி Indus Water Treaty | Nehru | Pakistan | Nation
பாஜ தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: 1960ல் போடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் முன்னாள் பிரதமர் நேருவின் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று. இந்த ஒப்பந்தம் தேசிய நலன்களை புறக்கணித்து தனிப்பட்ட ஒருவரின் விருப்பங்களுக்காக கொண்டுவரப்பட்டது. பாகிஸ்தானுடன் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் நேரு கையெழுத்திட்ட போது 80 சதவீத தண்ணீர் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. நம் நாட்டுக்கு 20% மட்டுமே கிடைத்தது. நாட்டின் நீர் பாதுகாப்பையும் தேசிய நலன்களையும் சமரசம் செய்து இந்த முடிவை நேரு எடுத்தார். இதில் மோசமான அம்சம் என்னவென்றால் நேரு இந்த முடிவை பார்லிமென்ட்டை கலந்தாலோசிக்காமலே செய்து முடித்தார். 1960 செப்டம்பரில் கையெழுத்தான சிந்துநதி நீர் ஒப்பந்தம், நவம்பரில் பார்லிமென்ட்டில் முன்வைக்கப்பட்டது. ஒரு அடையாளத்துக்காக வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே விவாதம் நடந்தது. அது மிக பெரிய தவறு. நேருவின் சொந்த கட்சி எம்.பி.க்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பாகிஸ்தானிடம் நேரு அடிபணிந்தார். அதற்கு பதிலாக அவர் எதையும் பெறவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் மேத்தா, இந்த ஒப்பந்தத்தை விமர்சித்தார். இரண்டாவது பிரிவினை போன்றது என கூறினார். நேருவின் சரணாகதியை கண்டு அவரது கட்சியினர், எதிர்க்கட்சிகள் மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அசோக் மேத்தாவின் வார்த்தைகள் அதை பார்லிமென்ட்டில் வெளிப்படுத்தின. நம் நாடு அந்நிய செலாவணி நெருக்கடியை சந்தித்த சமயத்தில், பாகிஸ்தானுக்கு 83 கோடி ரூபாயை இந்தியா வழங்கியது. காங்கிரசை சேர்ந்த ஏ.சி. குஹா அதை கண்டித்தார். நேருவின் செயல் முட்டாள் தனத்தின் உச்சம். இந்தியாவுடன் நட்புடன் இருக்க விரும்பாத பாகிஸ்தானுக்கு எதற்காக நாம் அனைத்து தியாகமும் செய்ய வேண்டும் என அவர் கேட்டார். பார்லிமென்ட்டில் அப்போது இளம் எம்.பியாக இருந்த வாஜ்பாய், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை கிழித்து எறிந்தார். நியாயமே இல்லாத பாகிஸ்தானின் கோரிக்கைகளுக்கு அடிபணிவதால் இரு நாடுகளிடையே நட்பு மற்றும் நல்லெண்ணம் உருவாகும் என்ற பிரதமர் நேருவின் வாதம் தவறானது. பாகிஸ்தானுடன் உண்மையான நட்பை ஏற்படுத்த முடியாது என வாஜ்பாய் வாதிட்டார். தேச நலனை முன்வைத்து அவரது கருத்துகள் தெளிவாக இருந்தன. இறுதியில் நேரு பேசினார். அவரது வாதங்கள் நம்பத்தக்கதாக இல்லை. அது மட்டுமின்றி அவை தேசிய உணர்வில் இருந்து வெகுதூரம் விலகி இருந்தன. காங்கிரஸ் எம்.பி.க்களே எதிர்த்த போதிலும் சிந்துநதி நீர் ஒப்பந்தம் இந்தியாவுக்கு நன்மை தரும் என நேரு பேசினார். நாட்டின் வளங்களை ஒப்படைக்கிற சர்வதேச ஒப்பந்தங்கள் குறித்த விஷயங்களில் பார்லிமென்ட்டின் அனுமதி பெறாமல் தானே முடிவுகளை எடுத்ததாக அவரே ஒப்புக்கொண்டார். அத்துடன் அவர் நிற்கவில்லை. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, தேச நலனுக்காக பேசிய எம்.பி.க்களின் கருத்துக்கள் மிகவும் குறுகிய மனப்பான்மை உடையவை என்றார். அது நேரு செய்த இமாலய தவறு. பார்லிமென்ட்டை புறக்கணித்து, நாட்டின் உயிர்நாடியை வைத்து சூதாடி பல தலைமுறைகளுக்கு இந்தியாவின் கைகளை கட்டி வைத்தவர் நேரு. பிரதமர் மோடியின் துணிச்சலான தலைமையும் எல்லாவற்றை விட மேலானது தேசம்தான் என்ற அர்ப்பணிப்பும் இல்லாவிட்டால், இன்றும் கூட ஒரு மனிதரின் தவறான லட்சியங்களுக்காக, நாடு தொடர்ந்து விலை கொடுக்க வேண்டி இருந்திருக்கும். காங்கிரஸ் செய்த வரலாற்று தவறை சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததன் மூலம் பிரதமர் மோடி சரி செய்திருக்கிறார் என நட்டா கூறினார்.