ஜெ சொத்து யாருக்கு? வெளியான பரபரப்பு தகவல் | Jayalalithaa Asset | Jayalalithaa Case
ஜெ.வின் ₹2,000 கோடி சொத்து என்ன ஆக போகிறது அடுத்து? மொத்தமா முடிஞ்சுது... தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைர நகைகள், நில பத்திரங்களை, தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம், கர்நாடக அரசு ஒப்படைத்தது. பெங்களூரு விதான் சவுதாவில் உள்ள கருவூலத்தில் இருந்து நான்கு பெட்டிகளில் நகைகள், 2 பெட்டிகளில் ஆவணங்கள் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பெற்றனர். பெங்களூரு ஸ்பெஷல் சிபிஐ கோர்ட் நீதிபதி மோகன் முன்னிலையில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கொண்டு வந்த, ஆறு இரும்பு பெட்டிகளில் நகைகள் அடுக்கி வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இதையடுத்து ஜெயலலிதா பெயரில் இருந்த 1,000 ஏக்கர் நில ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டன. அந்த ஆவணங்களை சூட்கேஸ்களில் வைத்தனர். வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தையும், உங்களிடம் ஒப்படைத்து விட்டோம் என்று கூறி, தமிழக அதிகாரிகளிடம், கர்நாடக அதிகாரிகள் எழுதி வாங்கிக் கொண்டனர். அரசு வக்கீல் கிரண் ஜவளி ஜெயலலிதாவின் நகைகள் பற்றிய பட்டியலை வாசித்தார். தங்கநகைகள், சில பதிக்கப்ப்ட வைர கற்கள், மரகதம், மாணிக்கம், மூன்று சில்வர் பொருட்கள் என, 27 கிலோ எடையுள்ளவற்றை பெற்றுக் கொண்டனர். தமிழக அரசின் உரிமம் பெற்ற நகை மதிப்பீட்டாளர் பிரபாகரன், இந்த பணியில் ஈடுபட்டார். நகைகளின் மதிப்பு, 60 கோடி ரூபாய். திருப்பி கொடுக்கப்பட்ட நகைகளில் இரண்டு கிலோ ஒட்டியாணம், ஒரு கிலோ கிரீடம், ஒன்றரை கிலோ தங்க கத்தி, 60 கிராம் எடையுள்ள தங்க பேனா, தங்க கைகடிகாரம், தங்க வாள் முக்கியமானவை. கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த நில ஆவணங்கள், பெட்டிகளில் இருந்த 2 லட்சத்து 20 ஆயிரத்து 384 ரூபாய் மதிப்புள்ள, பழைய ரூபாய் நோட்டுகளை திரும்ப ஒப்படைத்து உள்ளோம். ஜெயலலிதாவின் வங்கி கணக்கில் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, 10 கோடியே 18 லட்சத்து 78 ஆயிரத்து 591 ரூபாய் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. அந்த தொகை தமிழக வங்கிகளில் கணக்கில் உள்ளது. அதை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டு உள்ளார். சொத்து குவிப்பு தொடர்பான விசாரணையின் போது, பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு பஸ் தற்போது, சென்னை சிறப்பு விசாரணை குழு கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பஸ்சுக்கு யாரும் உரிமை கொண்டாடவில்லை. அந்த பஸ்சை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை, தமிழக அரசு தன் வங்கிக்கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். தமிழகத்தின் சென்னை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர், துாத்துக்குடி என, ஆறு மாவட்டங்களில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான, 1,512.16 ஏக்கர் நில ஆவணங்களையும் ஒப்படைத்து உள்ளோம். நாங்கள் திருப்பி ஒப்படைத்து உள்ள நகைகள், சொத்து ஆவணங்களை தமிழக அரசு பொது ஏலம் விடலாம். நிலம் இல்லாதவர்களுக்கும் வழங்கலாம். அது, அரசின் முடிவை பொறுத்தது. நகைகளை ரிசர்வ் வங்கியில் தற்போதைய மார்க்கெட் நிலவரத்திற்கு விற்றுக் கொள்ளலாம். பெட்டியில் இருந்து ஐந்து சேலைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த சேலைகள், ஜெயலலிதாவுக்கு யாரோ பரிசாக அளித்தவை. அவற்றை மதிப்பிடவில்லை. ஜெயலலிதாவின், 11,000த்துக்கும் மேற்பட்ட சேலைகள், அவர் பயன்படுத்திய செருப்புகள் உள்ளிட்டவைகளும் இருப்பதாக தகவல் வெளியாகின. அதில் உண்மை இல்லை. எங்களிடம் இருந்தவை நகைகள், நில ஆவணங்கள் மட்டும் தான்; அவற்றை ஒப்படைத்து விட்டோம். அத்துடன் இந்த வழக்கு முடிந்து விட்டது என வக்கீல் கிரண் ஜவளி கூறினார். ஜெயலலிதாவின் நகைகள் கடந்த, 1996ல் நகைகளை பறிமுதல் செய்த போது, அதன் மதிப்பு, 3.47 கோடி ரூபாய். தற்போதை மதிப்பு, 56.53 கோடி ரூபாய். 1,562 ஏக்கர் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், 1,000 ஏக்கர் நிலத்திற்கு தான் ஆவணங்கள் உள்ளன. 562 ஏக்கர் நிலத்திற்கு சரியான ஆவணம் இல்லை. ஒரே நிலத்தை பல முறை பதிவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது. 1,000 ஏக்கர் நிலமும், நகைகளின் மதிப்பும், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. நகை, நிலத்தை விற்றால் தமிழக அரசுக்கு மிக பெரிய லாபம் கிடைக்க போவது உறுதி என்கின்றனர் தமிழக அதிகாரிகள்.