அரசியல் நாடகம் அம்பலப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை | L.Murugan | Union Minister | Police arrest
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் மற்றும் பாஜ தலைவர்கள் கைது செய்யப்பட்டதை மத்திய அமைச்சர் எல்.முருகன் வன்மையாக கண்டித்துள்ளார். இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாக வணங்கப்படும் திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு சாப்பிட்டவர்களை தடுக்க திமுக அரசுக்கும் அதன் கைப்பாவையாக செயல்படும் போலீசுக்கும் திராணியில்லை. ஆனால் இன்று இந்து அமைப்பினர் போராடுவதால் மதக் கலவரம் உருவாகிவிடும் என்று கூறி, தமிழகம் முழுதும் உள்ள இந்து அமைப்பினரை கைது செய்வது சர்வாதிகாரத்தின் உச்சம். 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள மதுரையில், பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி தலைமையில் நூற்றுக்கணக்கானோர் பேரணி சென்றபோது ஏன் இந்த போலீஸ் தடுக்கவில்லை? அப்போது இந்த அடாவடித்தனமான கைது நடவடிக்கை எடுக்காத போலீசும், மாவட்ட நிர்வாகமும், திருப்பரங்குன்றத்திற்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது எப்படி நியாயமாகும்? ஜனநாயக நாட்டில் அடிப்படை உரிமைகளில் ஒன்றான மக்கள் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறக்கூடாது என ஐகோர்ட் தீர்ப்பில் நீதிபதிகள் தெளிவாக கூறியுள்ளனர். அப்படியிருக்க, இன்றைய போராட்டத்திற்கு திமுக கைப்பாவையான போலீஸ், அனுமதி மறுத்துள்ளதுடன், அத்துமீறி அனைவரையும் கைது செய்கிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்களே, சிறுபான்மையினர் ஓட்டு வங்கியை இழக்க கூடாது என்பதற்காக, நீங்கள் நடத்தும் அரசியல் நாடகங்கள் அனைத்தும் அம்பலப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஐகோர்ட் வழிகாட்டுதல்படி, ஜனநாயக ரீதியில் போராடுவதற்கான அனுமதி வழங்குவதுடன், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவும் எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார்.