உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மகாராஷ்டிராவில் டிச.5ல் மகாயுதி கூட்டணி அரசு பதவியேற்பு! Maharashtra election | Maharashtra CM | Dev

மகாராஷ்டிராவில் டிச.5ல் மகாயுதி கூட்டணி அரசு பதவியேற்பு! Maharashtra election | Maharashtra CM | Dev

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில், பாஜ 132, சிவசேனா 57 மற்றும் தேசியவாத காங் 41 இடங்களில் வென்றன. காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு 50 இடங்கள் மட்டுமே கிடைத்தன. தேர்தல் ரிசல்ட் நவம்பர் 23ம் தேதியே வெளியான போதும், மகாயுதி கூட்டணியில் முதல்வர் பதவி யாருக்கு என்பதை முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. அதிக இடங்களில் பாஜ வெற்றி பெற்றதால், அந்த கட்சிக்கே முதல்வர் பதவி வழங்க வேண்டும் என மாநில பாஜ நிர்வாகிகள் வலியுறுத்தினர். பாஜ தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அறிவித்தன. எனினும், முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க சிவசேனா தலைவர் ஷிண்டேவுக்கு மனமில்லை என்றே தகவல்கள் வெளியாகின. இதையடுத்து முதல்வர் குறித்து முடிவு செய்ய டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அனைத்தும் சுமூகமாக பேசி முடிக்கப்பட்டதாக பாஜவை சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் கூறினார். ஆனால், ஷிண்டே எந்த கருத்தையும் கூறாமல், சொந்த ஊரான சதாராவுக்கு புறப்பட்டு சென்றதால், கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இந்த பரபரப்பான சூழலில், மும்பை ஆசாத் மைதானத்தில் டிசம்பர் 5ம் தேதி மகாயுதி கூட்டணி அரசின் பதவியேற்பு விழா நடக்கும் என மாநில பாஜ தலைவர் சந்திரசேகர் அறிவித்துள்ளார். அதே போல், பாஜவுக்குத் தான் முதல்வர் பதவி, கூட்டணி கட்சிகளான சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி என டில்லியில் நடந்த கூட்டத்தில் பேசி முடிக்கப்பட்டதாக தேசியவாத காங் தலைவர் அஜித் பாவரும் அறிவித்துள்ளார். இதனால், கடந்த ஒரு வாரமாக தேசிய அளவில் பேசுபொருளாக இருந்த மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்துக்கு தீர்வு கிடைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜவுக்குத் தான் முதல்வர் பதவி என அஜித் பவார் கூறியிருப்பதன் மூலம், பாஜவை சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வராவது உறுதியாகியிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நவ 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி