டில்லி பெண்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுவது எப்போது? | Mahila Samridhi Yojana | Rekha Gupta CM
டில்லி பெண்கள் எதிர்பார்ப்பு ரேகா குப்தா முக்கிய அறிவிப்பு டில்லி சட்டசபை தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால், பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு, மாதம் 2,500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மாதம் முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பாஜ அரசு டில்லியில் பொறுப்பேற்றது. முதல் கேபினட் கூட்டத்தில் மகளிர் உதவித் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அந்த அறிவிப்பு அப்போது வெளியாகவில்லை. சர்வதேச மகளிர் தினத்தன்று உதவித் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகும் என பாஜ தலைவர்கள் கூறினர். இந்த நிலையில், டில்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து, முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது: சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு இனிய செய்தியை சொல்ல விரும்புகிறேன். டில்லி சட்டசபை தேர்தல் அறிக்கையில் பாஜ தந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்குவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக 5,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த என் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் மகளிர் நிதி உதவிக்கான போர்ட்டல் துவங்கப்படும். அதில் பதிவு செய்து, பயனாளிகள் நிதி உதவியை பெறலாம் என முதல்வர் ரேகா கூறினார்.