உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சர்வாதிகாரத்துடன் நடக்கும் எதிர்க்கட்சிகள்: நட்டா ஆவேசம் | Manipur Bill | Manipur Bill | Rajya Sabha

சர்வாதிகாரத்துடன் நடக்கும் எதிர்க்கட்சிகள்: நட்டா ஆவேசம் | Manipur Bill | Manipur Bill | Rajya Sabha

முந்தைய தேர்தல்களில் முறைகேடு, வாக்காளர் பட்டியலில் குளறுபடி என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, டில்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற எம்பிக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மதியம் ராஜ்யசபாவில் மணிப்பூர் மாநில பட்ஜெட் மற்றும் மணிப்பூர் ஜிஎஸ்டி திருத்த சட்ட மசோதா மீது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். காங். எம்பி மல்லிகார்ஜுன கார்கேவை பேச அனுமதிக்க வேண்டும் என்றனர். இதையடுத்து, அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், அவர் மணிப்பூர் மசோதா பற்றி பேசாமல், எஸ்ஐஆர் பற்றி பேச ஆரம்பித்தார். அவருடன் சேர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அரசு, தேர்தல் கமிஷனுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதனால் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்தார். மணிப்பூர் பிரச்னையை முன்னெடுத்து பேசிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அந்த மாநிலம் சார்ந்த மசோதா மீது விவாதிக்க மறுப்பது ஏன்? அமளியில் ஈடுபடுவது நியாயமா என்றார். பின்னர் மசோதா மீது குரல் ஓட்டெடுப்பு நடந்தது. சபையின் மைய பகுதியை சூழ்ந்த எதிர்க்கட்சி எம்பிக்கள், அதை தோற்கடிக்கும் நோக்கத்துடன் மசோதாவுக்கு எதிராக நோ என குரல் எழுப்பினர். இரு மசோதாக்களும் லோக்சபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் செயலுக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி நட்டா கடும் கண்டனம் தெரிவித்தார். மணிப்பூர் சாம்பியன்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட எதிர்க்கட்சியினர், இன்று மணிப்பூர் மாநில மசோதாவின் போது விவாதத்தில் ஈடுபட மறுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, மசோதாவை தோற்கடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அமளியில் ஈடுபடுவது, சபையை நடத்த விடாமல் குறுக்கீடு செய்வது போன்ற சர்வாதிகார போக்கை இனியும் ஏற்க முடியாது என்றார்.

ஆக 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை