எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு நிர்மலா சரவெடி பேச்சு Enforcement Directorate ED restores Rs 22,280 cro
லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், பொருளாதார குற்றங்களை செய்தவர்களிடம் இருந்து அமலாக்கத்துறை பறிமுதல் செய்த சொத்துக்கள் பற்றிய புள்ளி விவரங்களை சொன்னார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், முக்கிய சில வழக்குகளில் மட்டும் ரூ.22,280 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை மீட்டு பாதிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடம் ஒப்படைத்துள்ளது என நிர்மலா சீதாராமன் கூறினார். வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையாவிடம் இருந்து மட்டும் ரூ.14,131 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு பொதுத்துறை வங்கிகளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. வைர வியாபாரி நீரவ் மோடி வழக்கில் ரூ.1053 கோடி மதிப்புள்ள சொத்துக்களும், மெகுல் சோக்சி வழக்கில் ரூ.2566 கோடி சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார். இன்னும் சில மோசடி நிறுவனங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் பற்றிய விவரங்களையும் அவர் பட்டியலிட்டார். நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் நிறுவன மோசடி வழக்கில் ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்களுக்கு 17.47 கோடி ரூபாய் திரும்ப வழங்கப்பட்டுள்ளது என்றார். எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுவதுபோல பாரபட்சத்துடன் அமலாக்கத்துறை செயல்படுவதில்லை. பணக்காரர்களை தப்ப விட்டுவிடுகிறோம்; ஏழைகளை தண்டிக்கிறோம் என்பதெல்லாம் வீண்பேச்சு. யார் தவறு செய்தாலும் அவர்கள் நாட்டை விட்டே ஓடினாலும் பின்னாலேயே விரட்டிச் சென்று பணத்தை மீட்டு வந்து வங்கிகளிடம் ஒப்படைத்திருக்கிறோம்; மோசடி செய்தவர்களை மத்திய அரசு ஒருபோதும் தப்ப விடாது என நிர்மலா சீதாராமன் கூறினார்.