உறவினரை பார்க்க வந்த பாஜ நிர்வாகியை தூக்கிய போலீஸ் | Minister ponmudi | Bjp | vijayarani Arrest
பொன்முடி மீது சேற்றை வீசிய விஜயராணி சிறையில் அடைப்பு 15 நாள் காவல் நீதிபதி உத்தரவு தமிழகத்தில் கடந்தாண்டு ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். வெள்ள மீட்புப் பணியில் அரசு வேகமாக செயல்படாததால் பல கிராமங்களில் மக்கள் போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு நிவாரணம் வழங்குவதற்காக அமைச்சர் பொன்முடி சென்றார். 2 நாளாக வெள்ளத்தில் தத்தளித்தபோது எங்கே போனீர்கள்? இப்போது எதற்காக வந்தீங்க? இருக்கோமானு பாக்க வந்தீங்களா? என மக்கள் ஆவேசத்துடன் கேட்டனர். அப்போது, சிலர் பொன்முடி மீது சேற்றை வாரி வீசினர். இதனால், பொன்முடியின் வெள்ளை வேட்டி சட்டை முழுக்க சேறு பட்டது. அவருடன் வந்த கலெக்டர், முன்னாள் எம்பி கவுதம சிகாமணி, போலீஸ் சூப்பிரண்டுகள், மற்றும் பல துறை அதிகாரிகள் மீதும் சேறு பட்டது. இந்த சம்பவத்தை வைத்து, வெள்ள நிவாரணப் பணிகளை திமுக அரசு திறம்பட கையாளவில்லை என பல கட்சித்தலைவர்களும் முதல்வர் ஸ்டாலினை சாடினர். அமைச்சர் மற்றும் அதிகாரிகளை ஆபாசமாக திட்டி சேற்றை வாரி வீசி மிரட்டல் விடுத்ததாக போலீஸ் அதிகாரி அருள்தாஸ் திருவெண்ணெய் நல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். பாஜ நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், விஜயராணி ஆகிய இருவர்தான் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி வீசினர் என போலீசார் கூறினர். சிறப்பு படை அமைக்கப்பட்டு இருவரையும் தீவிரமாக தேடினர். கடந்த மாதம் 20ம்தேதி ராமகிருஷ்ணனை விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். வெளியூரில் பதுங்கியிருந்த அவர் குடும்பத்தினரை பார்க்க வந்தபோது போலீசார் சுற்றி வளைத்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 3 மாதத்துக்கு மேலாக தலைமறைவாக இருந்த விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜ மகளிரணி முன்னாள் துணை தலைவர் விஜயராணியை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். வெளியூருக்கு தப்பிச் சென்ற அவர், திருவெண்ணெய்நல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தபோது, விஜயராணியை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் கோர்ட்டில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.