உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இடைக்கால பிரதமர் யார்? நேபாளத்தில் புதிய சிக்கல் | Nepal | Gen z | Sushila Karki | Kul Man Ghising

இடைக்கால பிரதமர் யார்? நேபாளத்தில் புதிய சிக்கல் | Nepal | Gen z | Sushila Karki | Kul Man Ghising

சுசீலா கார்கி வேண்டாம் குல்மான் தான் பிரதமர் ஜென் இசட் குழு திடீர் போர்க்கொடி நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்ததை தொடர்ந்து இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடக்கத்தில் சமூக வலை தளங்களுக்கு எதிரான போராட்டமாக பார்க்கப்பட்டது. பிறகு நேபாள அரசின் ஊழல்களுக்கு எதிரான போராட்டமாக அது மாறி கலவரத்தில் முடிந்தது. நேபாள தலைநகர் காத்மண்டுவிலும் பிற நகரங்களிலும் இளைஞர்கள் தெருக்களில் இறங்கி அமைச்சர்களின் வீடுகள், அரசு கட்டடங்களுக்கு தீ வைத்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 31 பேர் இறந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பிரதமர் சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தப்பி ஓடினார். அதிபர் ராம் சந்திர பவுடல் மற்றும் அமைச்சர்களும் வரிசையாக ராஜினாமா செய்தனர். நேபாள நிதி அமைச்சரை இளைஞர்கள் ஓட ஓட விரட்டி அடித்தனர். முன்னாள் பிரதமர் வீட்டை தீ வைத்து எரித்தனர். வீட்டில் இருந்த அவர் மனைவி கருகி இறந்தார். இத்தனை களேபரங்களுக்கு பிறகு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து அமைதி சூழலை உருவாக்க ராணுவம் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறது. காத்மாண்டு மற்றும் பிற நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த ஜென் இசட் இளைஞர்கள் போராட்ட குழுவுடன் ராணுவம் பேச்சு நடத்தி வருகிறது. ஜனநாயகம் காப்பாற்றப்பட நேபாளத்தில் இடைக்கால அரசை உருவாக்க வேண்டும் என அவர்கள் கோரினர். போராட்டத்தை ஒருங்கிணைத்த காத்மாண்டு மேயர் பாலேன் ஷா அல்லது சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்து, அவர் தலைமையில் இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என இளைஞர்கள் போராட்டக்குழு வலியுறுத்தியது. மேயர் பாலேன் ஷா தலைமை ஏற்க விருப்பமில்லை என தெரிவித்தார். மக்கள் விரும்பினால் நாட்டை வழி நடத்த தயார் என 73 வயதான சுசீலா கார்கி கூறினார். இதைத் தொடர்ந்து நேபாள ராணுவ தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இடைக்கால அரசின் பிரதமராக சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டார். விரைவில் அவர் பதவி ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஜென் இசட் இளைஞர் போராட்டக்குழுவில் ஒரு பிரிவினர் சுசிலா கார்கிக்கு திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேபாள மின்சார ஆணைய நிர்வாக குழு முன்னாள் தலைவர் குல்மான் கிசிங்கை, இடைக்கால பிரதமராக நியமிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக பிளவுபட்ட ஜென் இசட் இளைஞர் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது நேபாள நாட்டு அரசியல் அமைப்பு சட்டம் முன்னாள் தலைமை நீதிபதிகள் பிரதமர் பதவிக்கு வருவதை தடுக்கிறது. மேலும் சுசீலா கார்கி திறமையற்றவர். 70 வயதுக்கு மேற்பட்டவராக அவர் உள்ளார். அவருக்கு பதிலாக தேசபக்தரான குல்மான் கிசிங்கை, இடைக்கால அரசின் பிரதமராக நியமிக்க வேண்டும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென் இசட் இளைஞர் போராட்டக் குழுவின் ஒரு பிரிவினர் பரிந்துரைக்கும் குல்மான் கிசிங்குக்கு 54 வயதாகிறது. எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். நேபாள நாட்டில் நிலவி வந்த நீண்டகால மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு கண்டவர் என்பதால் பலராலும் இன்ஜினியர் குல்மான் சிசிங் என்றே அவர் அறியப்படுகிறார். ஜென் இசட் இளைஞர்கள் குழுவில் ஏற்பட்டுள்ள இந்த கருத்து வேறுபாட்டால், இடைக்கால அரசை அமைப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நேபாளத்தில் அரசியல் குழப்பம் தொடர்கிறது.

செப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி