பாகிஸ்தான் நடத்துவது மறைமுக போர் அல்ல: பிரதமர் மோடி Operation Sindhoor| India - Pakistan War| Modi
குஜராத் தலைநகர் காந்திநகரில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். 2 நாட்களாக குஜராத்தில் சுற்றுப் பயணம் செய்கிறேன். மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும், மக்களிடம் தேசத்தின் மீதான அக்கறை, உணர்ச்சி பெருக்கை காண முடிந்தது. தேசம் முழுதும் இதே நிலைதான். நம் உடல் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும், ஒரு சிறு முள் குத்தினால், அது உடல் முழுதும் வலியை உணரச் செய்கிறது. நாம் அந்த முள்ளை பிடிங்கி எறிவது என முடிவு செய்துவிட்டோம். 1947ல் நாடு சுதந்திரம் அடைந்த போதே, பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள், காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தினர். காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்ரமித்தனர். பாகிஸ்தானால் ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்கும் வரை நம் படைகள் திரும்பக் கூடாது என, அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் கூறினார். ஆனால், அவரது பேச்சுக்கு மதிப்பளிக்கப்படவில்லை. அப்போதே, சரியான பதில் அடி கொடுத்து இருந்தால், இப்போது இந்த நிலை உருவாகியிருக்காது. 75 ஆண்டுகளாக நாம் பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்து வருகிறோம். இதுவரை இந்தியாவுடன் 3 முறை சண்டை செய்த பாகிஸ்தான் தோற்க்கடிக்கப்பட்டது. இனியும் நம்மை வெல்ல முடியாது என்று தெரிந்ததால், அவர்கள் மறை முக போரில் களம் இறங்கியுள்ளனர். மக்களோடு மக்களாக கலந்து, சமயம் பார்த்து நம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இனியும் இதை நாம் பொறுத்துக்கொள்ள வேண்டுமா? துப்பாக்கி குண்டுக்கு, துப்பாக்கி குண்டால் பதில் தர வேண்டுமா இல்லையா? இந்த முள்ளை அடியோடு பிடுங்கி எறிய வேண்டுமா இல்லையா? வசுதேவ குடும்பகம் என்ற சித்தாந்தத்தை கடைபிடிக்கும் நாடு இது. அண்டை நாட்டினரும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் நாம். ஆனால், மீண்டும் மீண்டும் நம்மை சீண்டினால், இது வீரர்களின் பூமி என்பதை நிரூபிப்போம். வெறும் 22 நிமிடங்களில் பயங்கரவாதிகளின் 9 இடங்கள் வேரறுக்கப்பட்டன. அதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளோம். பாகிஸ்தான் நடத்துவது மறைமுக போர் அல்ல. கொல்லப்பட்ட பயங்கவராதிகளுக்கு பாகிஸ்தான் அரசு மரியாதை கொடுக்கிறது. எனவே இதை நேரடி போராகத் தான் கருத வேண்டும். 2014 மே 26ம் தேதி முதல் முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றேன். அப்போது உலக அரங்கில் நம் நாட்டின் பொருளாதாரம் 11ம் இடத்தில் இருந்தது. கொரோனாவை எதிர்த்து போராடினோம், எதிரிகளின் தொல்லைகளை சமாளித்தோம், இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டோம். இத்தனைக்கு பிறகும் மிக்குறுகிய நாட்களில், உலகின் 4வது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளோம். 250 ஆண்டுகள் நம்மை ஆட்சி செய்த பிரிட்டனை பின்னுக்கு தள்ளி உலக பொருளாதாரத்தில் 6ம் இடத்தில் இருந்து 5ம் இடத்திற்கு முன்னேறினோம். தற்போது ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலக பொருளாதாரத்தில் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளோம். அந்த ஆனந்தத்தை விட, 3ம் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற உத்வேகம், அழுத்தம் அதிகம் உள்ளது. ஏனென்றால் மக்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். மோடியால் எதுவும் சாத்தியம் என எண்ணுகின்றனர். 2047ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைந்தே ஆக வேண்டும். உலக பொருளாதாரத்தில் 3 வது சக்தியாக உருவெடுக்க நகர்ப்புற பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். திட்டமிடல் வெறும் கற்பனையுடன் முடிவடையாமல், செயல்பாட்டுக்கு வரும் வரை முயற்சிக்க வேண்டும். ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை நம் முப்படை வீரர்களால் நடத்தப்பட்டது. இனி வரும் நாட்களில் அது 140 கோடி மக்களால் முன்னெடுக்கப்பட வேண்டும். நாட்டை காப்பதிலும், முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதிலும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்குள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த, உள்நாட்டு பொருட்களை மட்டுமே பயன்படுத்துவோம். மேட் இன் இண்டியா திட்டத்திற்கு கை கொடுங்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.