பழனிசாமி கண்டுபிடித்தது அதிமுகவினர் தான் என்கிறார் ரகுபதி | Palanisami | ADMK | DMK | Minister
பாம் வைப்பதும் நானே எடுப்பதும் நானே! பழனிசாமி vs ரகுபதி சேலம், ஆத்தூர் அருகே டாஸ்மாக்கில் கள்ளச்சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நாட்டையே உலுக்கிய கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்து ஸ்டாலின் அரசு பாடம் கற்கவில்லையா என கேள்வி எழுப்பி எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த சம்பவத்துக்கு சட்ட அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். அவரது அறிக்கை; வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தால் வீடியோவை வெளியிட்டது அதிமுகவின் தொழிற்சங்க வட்ட செயலாளராக இருந்த ராஜாவின் உறவினர் ரவி என்பது தெரிய வந்துள்ளது. அவருக்கு கள்ள சாராயம் வாங்கி கொடுத்ததே அதிமுகவின் ராஜா தான் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதிமுக பிரமுகர் ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அண்ணாநகர் பாலியல் வழக்கு, காரில் திமுக கொடிகட்டிய ரவுடிகள் தொடங்கி நேற்றைய கள்ளச்சாராய வீடியோ வரை பழனிசாமி முன் வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்திலும் அடுத்த நாளே அவர்கள் அதிமுகவினர் என தெரிய வருகிறது. பாம் வைப்பதும் நானே எடுப்பதும் நானே என்ற கணக்கில் அவசர அவசரமாக அறிக்கை வெளியிடுவதும், உண்மை தெரிந்தவுடன் அமைதி காப்பதும் என ஒரே அஜெண்டாவுடன் பழனிசாமி செயல்பட்டு வருகிறார். சொந்த கட்சியினர் ஒரு குற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்தால் உடனே அரசை குறை கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டு அந்த சம்பவத்தையே திசை மாற்றி மக்களை குழப்பும் பணியைத்தான் எடப்பாடி செய்து வருகிறார். ஒருவேளை செட்டிங் செய்கிறார்களோ என்றும் சந்தேகம் வருகிறது என அமைச்சர் ரகுபதி கூறி உள்ளார்.