பழனிசாமியின் சீக்ரெட் சர்வே!, சீக்ரெட் கமிட்டி! | Palanisami | ADMK | PMK | NTK | Seeman | Anbumani
140 தொகுதிகளை அள்ளலாம் பழனிசாமி நடத்திய ரகசிய சர்வே! பாமக, நாதகவுக்கு தூது சட்டசபை தேர்தலில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், எவ்வளவு சீட் கிடைக்கும் என்பதை அறிய தனியார் அமைப்பு வாயிலாக சர்வே நடத்தியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி. தேர்தலுக்கு ஓராண்டு உள்ள நிலையில், அதிமுக தனித்து போட்டியிட்டால் 94 தொகுதிகளை கைப்பற்ற முடியும். தவெகவுடன் கூட்டணி அமைத்தால் கூடுதலாக 15 தொகுதிகளில் வெற்றி பெற முடியும். பாஜவுடன் கூட்டணி அமைத்தால் கூடுதலாக ஐந்து தான் தேறும். பாமகவுடன் மட்டும் கூட்டணி வைத்தால் 114 தொகுதிகளில் வெற்றி பெற முடியும். பாமக, நாம் தமிழர் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் 140 தொகுதிகளில் வெல்ல முடியும் என சர்வே முடிவில் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பாமகவையும், நாம் தமிழர் கட்சியையும் கூட்டணியில் சேர்க்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் பழனிசாமியை, அவரது சேலம் இல்லத்தில் தன் குடும்ப திருமண விழாவுக்கு அழைக்க பாமக தலைவர் ஜி.கே.மணி சந்தித்தார். அப்போது 45 தொகுதிகள் வரை கொடுப்பதாகவும், 2026ல் ராஜ்யசபா எம்பி பதவி தருவதாகவும் பழனிசாமி கூறியுள்ளதாக தெரிகிறது. அதேபோல் நாதகவுக்கும் சீட் வழங்கப்படும் என சீமானுக்கு பழனிசாமி தரப்பில் துாது விடப்பட்டுள்ளது. இரு கட்சிகளிடமிருந்தும் இன்னும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. கூட்டணி அமைப்பதற்கு முன் கட்சியில் சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கவும், தனக்கு விரோதமாக செயல்படும் நிர்வாகிகளை களையெடுக்கவும் சீக்ரெட் கமிட்டி ஒன்றை பழனிசாமி அமைத்து உள்ளார். கொங்கு மண்டலத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகள், டெல்டா மாவட்டங்களில் தினகரன், சசிகலா, பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகள் மீதான புகார்களை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், டெல்டா மாவட்ட அமைப்பு செயலர்கள் சிலரை முதற்கட்டமாக களையெடுக்க பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.