பழனிசாமி-செங்கோட்டையன் பனிப்போர்: அதிமுக தாங்குமா? | Palanisamy | Eps | Senkottaiyan | Admk
செங்கோட்டையனின் பதவிகளை பறிக்க திட்டமா? பழனிசாமியுடன் மோதல் அதிகரிப்பு அதிமுகவில் பொதுச்செயலர் பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. கட்சியில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலர், அமைப்பு செயலர் பதவிகளை செங்கோட்டையன் வகிக்கிறார். சமீபத்தில், செங்கோட்டையனின் சொந்த மாவட்டத்தை சேர்ந்த 4 பேருக்கு, அவரிடம் கலந்து ஆலோசிக்காமல் மாநில பதவிகளை பழனிசாமி வழங்கினார். இதனால், செங்கோட்டையன் அதிருப்தி அடைந்தார். அதைத்தொடர்ந்து, பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில், ஜெயலலிதா படம் இல்லை எனக்கூறி விழாவில் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. அதன் பின் இருவரும் நேருக்குநேர் சந்திப்பதை தவிர்த்து வருகின்றனர். சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின்போது, அரசுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் முழக்கம் எழுப்பியபோது செங்கோட்டையன் அமைதி காத்தார். மறுநாள் சபாநாயகரை அவர் சந்தித்தது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. தொகுதி சம்பந்தமாக பேசியதாக அவர் கூறினார். சாணக்யா யு டியூப் சேனல் ஆண்டு விழாவில் பேசிய செங்கோட்டையன் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலாவை புகழ்ந்தார். இது பழனிசாமி தரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அவரை கண்டிக்கும் வகையில், பொதுவெளியில் அவர் இப்படி நடந்துகொள்வது அநாகரிகம் என்று முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கூறினார். இச்சூழலில், ஏற்கனவே பாஜவுக்கு ஆதரவாக செயல்பட்டோரின் கட்சி பதவிகளை பறித்தது போல, செங்கோட்டையனின் பதவிகளையும் தற்காலிகமாக பறிப்பது குறித்து, மூத்த நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம், செங்கோட்டையனை பழனிசாமி அழைத்து பேசாததும், மூத்த நிர்வாகிகள் சிலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, செங்கோட்டையனிடம் பழனிசாமி நேரில் பேசினாலே பிரச்னை தீர்ந்துவிடும். ஆனால், பழனிசாமியோ, அதிருப்தியில் உள்ள ஒவ்வொருவரையும் அழைத்து பேசமுடியுமா? யாராக இருந்தாலும் கட்சி தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்கிறார். ஏற்கனவே பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதால் தென்மாவட்டங்களில் கட்சி பலவீனம் அடைந்துள்ளது. இப்போது செங்கோட்டையனுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே இதை தீர்த்தால் கட்சிக்கு நல்லது என்பதே மூத்த தலைவர்கள் சிலரின் எண்ணமாக இருக்கிறது என நிர்வாகிகள் கூறினர்.