அமித்ஷா ஆப்ரேஷனின் அதிர்ச்சி பின்னணி Palanisamy Amit Shah meet | Annamalai | sengottaiyan | admk bjp
2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான அரசியல் ஆட்டம் இனிதே ஆரம்பித்து விட்டது. இந்த ஆட்டத்தை துவங்கி வைத்தவர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. அவர் டில்லி சென்று திரும்பிய பிறகு மீண்டும் அதிமுக-பாஜ கூட்டணி மலர்ந்து விட்டது என்ற ஊகம் வலுவாக கிளம்பியது. பழனிசாமி திரும்பியதும் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை டில்லி சென்றார். அவர் ஊர் திரும்பியதும் கொடுத்த முதல் பேட்டியே அதிர்ச்சியை கிளப்பியது. ‛நான் தொண்டனாக இருந்து வேலை செய்யவும் தயார் என்று டில்லியில் சொல்லி விட்டேன். அப்படி என்றால் அதன் பொருளை உணர்ந்துகொள்ளுங்கள் என்று பரபரப்பை பற்ற வைத்தார். எனவே தான் மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை தூக்கப்படுகிறாரா என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் செங்கோட்டையனின் டில்லி விசிட். பழனிசாமி-அமித்ஷா என்ன பேசி இருப்பார்கள்? அண்ணாமலையுடன் அமித்ஷா, நட்டா என்ன விவாதித்து இருப்பார்கள்? செங்கோட்டையன் டில்லியில் யாரை சந்தித்தார்? என்ன பேசினார்? இந்த மூன்று அரசியல் மர்மங்கள் தான் இப்போது தமிழகத்தை தீப்பிடிக்க வைத்திருக்கிறது. இது பற்றி அரசியல் நிபுணர்கள் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். உண்மையில் பழனிசாமி, அண்ணாமலை, செங்கோட்டையன் டில்லி விசிட்டில் என்ன நடந்தது? பாஜ-அதிமுக கூட்டணி உறுதியாகி விட்டதா? அண்ணாமலை மாற்றப்படுவது உண்மை தானா? என்பது பற்றி அரசியல் நிபுணர்கள் சொல்வதை பார்க்கலாம். பாஜவுக்கு இந்த தேர்தலும், அடுத்து வரும் பார்லிமென்ட் தேர்தலும் முக்கியமானது. தமிழகத்தில் பாஜ வலுவாக காலூன்ற அதிமுக கூட்டணி அவசியம் என்று பாஜ மேலிடம் கருதுகிறது. ஆனால் அதிமுகவுக்கு பாஜவுடன் செல்ல விருப்பம் இல்லை. தவெகவுடன் கூட்டணி வைப்பது பற்றி பரிசீலனை செய்து வந்தது. தவெகவும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா என்ற யோசனையில் தீவிரமாக இறங்கி இருந்தது. இதை அப்படியே விட்டால் ரூட் மாறி விடும் என்று கருதியதால் தான், முந்திக்கொண்டு பழனிசாமியை டில்லிக்கு வரவழைத்தார் அமித்ஷா. பாஜவுடன் ஒரு காலமும் கூட்டணி கிடையாது என்று முரண்டு பிடித்த பழனிசாமி, அமித்ஷா அழைப்பை தட்டிக்கழிக்காமல் டில்லி சென்றார். அதுவும், பரபரப்பாக சட்டசபை நடந்து கொண்டிருக்கும் போதே புறப்பட்டு போனார். புதிதாக கட்டிய கட்சி அலுவலகத்தை தான் பார்க்க வந்தேன் என்று முதலில் சொன்னார். ஆனால் அவர் அமித்ஷாவை தான் பார்க்க போய் இருக்கிறார் என்று முன்கூட்டியே திமுக மோப்பம் பிடித்து சொன்னது. மாலை வரை ஊகமாக இருந்த சந்திப்பை உண்மையாக்கினார் பழனிசாமி. தனது சகாக்களை கூட்டிக்கொண்டு நேரே அமித்ஷாவின் வீட்டுக்கு போனார். 2 மணி நேரத்துக்கும் மேலாக அமித்ஷாவுடன் பேசினார்கள். தனியாகவும் அமித்ஷாவுடன் பேசினார் பழனிசாமி. தமிழக நலனுக்காக அமித்ஷாவை சந்தித்தேன் என்று பழனிசாமி அடித்து சொன்னாலும் யாரும் நம்ப தயாராக இல்லை. அதிமுக-பாஜ கூட்டணி பற்றி தான் நீண்ட நேரம் பேசினர் என்பதை அனைவரும் யூகித்து விட்டனர். அதே நாளில், ‛2026ல் என்டிஏ கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் போது மது வெள்ளமும், ஊழல் வெள்ளமும் தடுக்கப்படும் என்று அமித்ஷா சொன்னார். இது பாஜ-அதிமுக கூட்டணி பேச்சை கன்பார்ம் செய்து விட்டது. 2024 பார்லிமென்ட் தேர்தலுக்கு முன் பாஜ-அதிமுக கூட்டணி உடைந்தது. அப்போது, பாஜ தனித்து நிற்க வேண்டும் என்று அண்ணாமலை விரும்பினார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால், தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்பது போல் பேசினார். திமுகவை வசைபாடிய அதே நேரத்தில் அதிமுகவுக்கு எதிராகவும் அண்ணாமலை கொந்தளித்தார். அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கூட்டணியை முறித்தார் பழனிசாமி. இனி எந்த காலத்திலும் பாஜவுடன் கூட்டணி கிடையாது என்று பழனிசாமியும் ஆவேசமாக பேசி வந்தார். ஆனால் அவரை அமித்ஷா வழிக்கு வரவழைத்து விட்டார். பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி பிடித்த செங்கோட்டையனை வைத்து அவர் காய் நகர்த்தியதாக தகவல் வெளியானது. அதே போல் பழனிசாமி உறவினர்களை அமலாக்கத்துறை மூலம் வளைக்க போட்ட ஸ்கெட்சும் பழனிசாமி காதுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதிமுக இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் கமிஷனில் இருக்கும் பஞ்சாயத்தையும் பழனிசாமிக்கு நியாபகப்படுத்தி இருக்கின்றனர். எனவே தான் முரண்டு பிடிப்பதை நிறுத்தி விட்டு அமித்ஷாவை சந்தித்தார் பழனிசாமி. கூட்டணி விவகாரம் குறித்து அமித்ஷா கறாராக பேசி இருக்கிறார். அதிமுகவுக்கு பாதி சீட், மீதி பாதியில் பாஜ மற்றும் கூட்டணியில் வரும் அனைத்து கட்சிகளும் பங்கிட்டுக்கொள்ளும் என்பது போல் ஒரு ஆப்ஷன் கொடுத்துள்ளார். அதே போல் அதிமுக ஆட்சி அமைக்கும் பட்சத்தில், ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதையும் முக்கிய டிமாண்டாக அமித்ஷா சொல்லி இருக்கிறார். இது பழனிசாமிக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. இது பற்றி கட்சியினருடன் கலந்து பேசி சொல்வதாக பதில் அளித்துள்ளார். அதே நேரம் அமித்ஷாவிடம் முக்கிய டிமாண்டை பழனிசாமி வைத்திருக்கிறார். அதுதான் அண்ணாமலை பற்றியது. அண்ணாமலை திமுக மட்டும் இன்றி அதிமுகவையும் ஆவேசமாக சீண்டி வருகிறார். போன முறை அவரால் தான் கூட்டணி முறிந்தது. எனவே அதிமுக கூட்டணிக்குள் வர வேண்டும் என்றால் அவரை மாநில பதவியில் இருந்து இறக்க வேண்டும். அல்லது அவரது பவரை குறைக்க வேண்டும் என்று பழனிசாமி டிமாண்ட் வைத்துள்ளார். இது பற்றி அமித்ஷா உடனடியாக எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை. இருப்பினும் பழனிசாமி கிளம்பியதும், அண்ணாமலையை டில்லி வரும்படி அழைத்தார் அமித்ஷா. தமிழகத்தில் நிலவும் இப்போதைய அரசியல் சூழல், பாஜவின் வளர்ச்சி பற்றி விவாதித்தார். பின்னர் பழனிசாமியுடன் நடந்த பேச்சு பற்றி எடுத்து சொன்னார். அதிமுகவுடன் பாஜ கூட்டணி வைக்க வேண்டியதன் தேவை குறித்தும் அண்ணாமலையுடன் பேசினார். ஆனால் அண்ணாமலைக்கு அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் விருப்பம் இல்லை. அப்படி கூட்டணி வைத்தால் தமிழகத்தில் பாஜவின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று அவர் கருதுகிறார். தமிழகத்தில் பாஜ தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும் என்றும் விரும்புகிறார். இதெல்லாம் பற்றி மனதில் பட்டதை முழுமையாக அமித்ஷாவிடம் சொல்லி விட்டார் அண்ணாமலை. அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் சாதாரண தொண்டனாக இருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அண்ணாமலை கோரி இருக்கிறார். அண்ணாமலைக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பது தான் பாஜ மேலிடத்தின் விருப்பம். ஆனால், அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக தமிழக பாஜ தலைமையை மாற்ற வேண்டிய தேவை வந்தாலும், அதை செய்ய தயாராக இருப்பதை அமித்ஷாவும் தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. எனவே தான் டில்லி விசிட் முடிந்து தமிழகம் வந்த அண்ணாமலை பேச்சில் மிகப்பெரிய மாற்றம் இருந்தது. செய்தியாளர்கள் வளைத்து வளைத்து கேட்ட போதும் அதிமுகவை எந்த இடத்திலும் விமர்சிக்கவில்லை. அதிமுக-பாஜ கூட்டணி உறுதியாகி விட்டதா என்று அண்ணாமலையிடம் கேட்ட போது, ‛கூட்டணி பற்றி அமித்ஷா சொல்வது தான் இறுதி முடிவு. அவர் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியையே பைனலாக எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். அதாவது, அதிமுகவுடன் கூட்டணி பேச்சை துவங்கி இருப்பதாக ஆங்கில தொலைக்காட்சிக்கு அமித்ஷா பேட்டி அளித்து இருந்தார். இதன் மூலம் அதிமுக-பாஜ கூட்டணியை அண்ணாமலை உறுதி செய்தார். அதே நேரம் மாநில தலைவர் பதவியில் இருந்து தான் விலகப்போவதை சற்றே வெளிப்படையாகவும் சொன்னார். ‛நான் என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். தொண்டனாக வேலை பார்க்கவும் தயாராக இருக்கிறேன் என்று டில்லியில் சொல்லி விட்டேன். அதன் பொருளை நீங்கள் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்று செய்தியாளர்களை பார்த்து சொன்னார். தொண்டனாக வேலை பார்க்கவும் தயார் என்று சொன்னதை கூட சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதன் பொருளை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அழுத்தமாக சொன்னது தான், அவர் மாநில தலைவர் பதவியில் இருந்து விலக இருப்பதை உணர்த்தி இருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜ தலைவர் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று போன தேர்தலிலேயே அவர் சொல்லி இருந்தார். இப்போது அளித்த பேட்டியிலும், நான் எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். மாற்றி மாற்றி பேசுபவன் நான் இல்லை என்று அண்ணாமலை கூறினார். இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது, அதிமுக-பாஜ கூட்டணி உறுதியாகி விட்டது என்பதும்; அண்ணாமலைக்கு பதில் புதிய மாநில தலைவர் நியமிக்கப்பட இருப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இன்னும் இருப்பது ஒரே ஒரு மர்மம் தான். அது செங்கோட்டையனின் சீக்ரெட் டில்லி விசிட். பழனிசாமியுடன் பனிப்போரில் ஈடுபட்டு வந்த செங்கோட்டையன், ரகசியமாக டில்லி சென்றார். சென்னை அல்லது கோவை ஏர்போர்ட் வழியாக டில்லி சென்றால், மீடியாவிடம் மாட்டிக்கொள்வோம் என்பதால் காரில் மதுரை வந்து, அங்கிருந்து விமானத்தில் டில்லி சென்றார் செங்கோட்டையன். ஆனால் அதையும் மோப்பம் பிடித்து விட்டார்கள். பழனிசாமி விசிட் முடிந்து அண்ணாமலை டில்லியில் இருக்கும் அதே நேரத்தில் செங்கோட்டையன் சென்றதால் கூடுதல் பரபரப்பு நிலவியது. அவர் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் அவர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது இப்போது உறுதியாகி விட்டது. அமித்ஷாவின் ஆப்ரேஷனில் முக்கிய புள்ளியாக செங்கோட்டையன் இருப்பதும் தெரியவந்துள்ளது. பழனிசாமி டிமாண்டுக்காக தமிழக பாஜ தலைமையில் மாற்றம் கொண்டு வர பாஜ மேலிடம் தயாராக இருக்கும் அதே நேரத்தில், தங்கள் டிமாண்டை பழனிசாமி ஏற்காவிட்டால், அவரையே தூக்கியடிக்கவும் மெகா பிளான் வைத்திருக்கிறதாம். அதற்கான அமித்ஷாவின் துருப்புச்சீட்டு தான் செங்கோட்டையன். ஜெயலலிதா மறைவு மற்றும் சசிகலா சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வந்த போது, முதல்வர் ஆகும் வாய்ப்பு செங்கோட்டையனுக்கு தான் முதலில் வந்தது. ஆனால் அவர் சற்றே யோசிக்கும் நேரத்தில் குறுக்கே புகுந்து ஆட்டத்தையே டோட்டலாக மாற்றியவர் பழனிசாமி. இப்போது பழனிசாமி-செங்கோட்டையனுக்கு நடுவில் இருக்கும் மோதலை வைத்து அமித்ஷா காய் நகர்த்த துவங்கி இருக்கிறார். அமித்ஷா வைத்த டிமாண்டை பழனிசாமி ஏற்காவிட்டால், சில முக்கிய அதிமுக தலைவர்கள் மற்றம் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா மூலம் செங்கோட்டையனை மீண்டும் அதிமுகவுக்கு தலைமை தாங்க வைக்கும் ஆப்ரேஷனை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளார். இந்த ஆப்ரேஷன் பற்றி பேசவும், செங்கோட்டையனை டில்லிக்கு வரவழைத்து பழனிசாமிக்கு நெருக்கடி கொடுப்பதுமே அமித்ஷாவின் முக்கிய திட்டம். அதற்காக தான் செங்கோட்டையன் டில்லி சென்றார். அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில் இது அரசியல் களம். அடுத்த கணம் என்ன நடக்கும் என்பதை அவ்வளவு எளிதில் கணித்து விட முடியாது. அரசியலில் திடீர் திடீரென நடக்கும் அதிசயங்களை பார்த்து ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. கவுண்டமணி சொல்லும் டயலாக் போல, ‛அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... என்பது மட்டுமே உண்மை.