டில்லியில் பழனிசாமி செய்த முதல் சம்பவம்-வீடியோ | palanisamy delhi visit | admk bjp | dmk vs bjp
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான பழனிசாமி திடீரென டில்லி புறப்பட்டு சென்றார். அவரது டில்லி பயணம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 2026 சட்டசபை தேர்தலில் பாஜவுடன் அதிமுக கூட்டணி வைக்கப்போகிறது; பாஜ மேலிட தலைவர்களுடன் இதற்கான பேச்சு நடத்தவே அவர் டில்லி சென்றிருக்கிறார் என்ற பேச்சு எழுந்தது. குறிப்பாக பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்து விடுமோ என்ற பதற்றத்தை திமுகவினர் வெளிப்படையாகவே காட்ட ஆரம்பித்தனர். இவ்வளவு பரபரப்புக்கு ஊடே டில்லி சென்ற பழனிசாமி, முதல் வேலையாக அங்குள்ள அதிமுக ஆபீசை சென்று பார்வையிட்டார். அதிமுகவுக்கு டில்லியில் புதிதாக அலுவலகம் கட்டப்பட்டது. இதை சமீபத்தில் தான் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிலையில் தான் புதிய கட்டடத்தை நேரில் பார்வையிட்டார். அவருடன் தம்பிதுரை, சிவி சண்முகம் ஆகியோரும் இருந்தனர். முன்னதாக டில்லி ஏர்போர்ட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, எந்த அரசியல் தலைவரையும் பார்க்க வரவில்லை. டில்லி அதிமுக கட்சி அலுவலகத்தை தான் பார்க்க வந்தேன் என்று விளக்கம் அளித்து இருந்தார். இருப்பினும் சஸ்பென்ஸ் தணியவில்லை. காரணம், முன்னாள் அமைச்சர் வேலுமணியும் டில்லி புறப்பட்டு சென்றுள்ளார். பழனிசாமி, வேலுமணி, தம்பிதுரை உள்ளிட்டோர் அமித்ஷாவை சந்தித்து பேசுவார்கள் என்று இன்னும் பல ஊகங்கள் சுற்றி வருகின்றன. சமீபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் அமித்ஷாவை சந்தித்து பேசி இருந்தார். அவரது ஏற்பாட்டின் பெயரிலேயே இந்த சந்திப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் இன்னும் பரபரப்பு அடங்கவில்லை.