கர்நாடக முதல்வர் பதவி ரேஸில் பரமேஸ்வரா: பிப்ரவரிக்குள் முடிவெடுக்க கெடு விதிப்பு Parameshwara on CM
#DKS| Siddharamaiah| KarnatakaCM| KarnatakaPolitics| Congress| BJP| Parameshwara| DKShivakumar கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. டி.கே.சிவகுமார் துணை முதல்வராக உள்ளார். சித்தராமையா தலைமையில் 2.5 ஆண்டு கால ஆட்சி முடிந்துவிட்ட நிலையில், தேர்தல் சமயத்தின் போது பேசப்பட்டது போல், மீதமுள்ள 2.5 ஆண்டுகள் முதல்வர் பதவியை சிவகுமாருக்கு விட்டுத் தர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கொடி பிடித்து வருகின்றனர். முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் சிவகுமாரும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சித்துவோ நாற்காலியை விட்டுத் தரும் எண்ணத்தில் இல்லை. இதனால், இருவர் இடையே ஏற்படுள்ள மனக்கசப்பு பொது வெளியில் அவ்வப்போது அப்பட்டமாக வெளிப்பட்டது. இருவரும் மாறி மாறி டில்லி சென்று காங். மேலிட தலைமையை சந்தித்து, தங்கள் தரப்பு நியாமயத்தை எடுத்துரைத்தனர். இந்த விவகாரத்தில் இருவருமே தங்களுக்குள் பேசி சமாதான உடன்படிக்கைக்கு வரும் படி, மேலிடம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதன் படி, சமீபத்தில் சித்து - சிவா இருவரும் மாறி மாறி தங்கள் வீட்டில் ஒருவருக்கொருவர் விருந்தளித்தனர். முதல்வர் பதவி விவகாரத்தில் தங்கள் இடையே எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என இருவரும் கூறி வரும் நிலையில், மாநில உள்துறை அமைச்சராக பரமேஸ்வராவும் இந்த ரேஸில் குதித்துள்ளார். சித்து - சிவா இருவரும் ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர்கள். பரமேஸ்வரா பட்டில் இனத்தை சேர்ந்தவர். எனவே, முதல்வர் பதவி மாற்றம் நிகழ்ந்தால், அடுத்த முதல்வராக பரமேஸ்வராவைத் தான் நியமிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பரமேஸ்வராவின் ஆதரவாளர்கள் டில்லிக்கு சென்று காங். தலைமையகம் முன் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி குரல் எழுப்பினர். மூத்த தலைவர்களை சந்தித்து தங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்தனர். இது குறித்து பரமேஸ்வரா கூறியதாவது: கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த அரசியல் நிகழ்வு இன்னும் துவங்கவே இல்லை. அதற்குள் அந்த பிரச்னை முடிந்து விட்டதாக எப்படிக் கூற முடியும். என்னை முதல்வராக்கிப் பார்க்க வேண்டும் என என் ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். அவர்கள் அப்படி ஆசைப்படக் கூடாது என நான் எப்படிச் சொல்வது. அவர்களின் ஆசையை மேலிடத்திலும் கூறியுள்ளனர். அதை நான் தடுக்க முடியாது. முதல்வர் பதவி மாற்றம் குறித்து மேலிடத்தலைமை தான் முடிவெடுக்க வேண்டும். மாநில பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் குறைந்த நாட்களே உள்ளன. பிப்ரவரியில் அதற்கான தயாரிப்பு பணிகள் துவங்கி விடும். காங். அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதற்காக பட்ஜெட் போட வேண்டும். அதை யாராவது செய்து தானே ஆக வேண்டும். எனவே, முதல்வர் மாற்றம் குறித்து காங். தலைமை ஏதேனும் முடிவெடுத்தால், இன்னும் ஒரு மாதத்திற்குள் அதாவது பிப்ரவரி ஆரம்பிப்பதற்குள் முடிவை அறிவிக்க வேண்டும் என, பரமேஸ்வரா கூறினார். கர்நாடக அரசியலில், முதல்வர் பதவியை பிடிப்பதில் சிவகுமார் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அதை விட்டுக் கொடுக்க மனமின்றி, சித்தராமையா அடம் பிடிக்கிறார். இந்த நிலையில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவும் இந்த ரேஸில் குதித்துள்ளார். அதுவும் தான் சார்ந்த சமூகத்தை முன்வைத்து அவர், முதல்வர் நாற்காலியை பிடிக்க முயற்சிப்பதால் மாநில அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது.