முன்னாள் டிஎஸ்பி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு தள்ளுபடி |Ponn Manickavel | Kader Batcha | Supreme Court
பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கு டிஸ்மிஸ்! திருநெல்வேலி மாவட்டம் பழவூர் நாறும்பூநாதர் சிவன் கோயிலில் இருந்து 2005ம் ஆண்டு நாடராஜர் உட்பட 13 ஐம்பொன் சாமி சிலைகள் திருடுபோயின. இதில் 6 சிலைகள் விருதுநகர் ஆலப்பட்டியில் 2008 ல் கண்டுபிடிக்கப்பட்டன. சில சிலைகள் சர்வதேச கடத்தல் கும்பல் உதவியுடன் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல் விசாரணை நடத்தினார். சிலைகள் திருட்டு தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த காதர் பாட்ஷா உள்ளிட்டோர் மீது 2017ல் வழக்குப்பதியப்பட்டது. சிலைகள் கடத்தலுக்கு துணையாக இருந்ததாகவும், கடத்தல்காரர்களை தப்பிக்க வைக்க முயற்சித்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. காதர் பாட்ஷா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தம்மை கைது செய்தது சட்டவிரோதமானது எனக்கூறி, ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக காதர் பாட்ஷா, சென்னை ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கை ஐகோர்ட் டிஸ்மிஸ் செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு போனார் காதர் பாட்ஷா. இந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.