ராஜ்யசபாவில் பலம் இழந்தது பாஜ கூட்டணி! இனி என்ன நடக்கும்? | NDA loses majority in Rajya Sabha | BJP
பாஜ பலம் அம்போ ராஜ்யசபாவில் அடுத்து என்ன? ராஜ்யசபாவில் இருக்க வேண்டிய மொத்த எம்பிக்கள் எண்ணிக்கை 245. இப்போதுள்ள நிலவரப்படி 225 பேர் இருக்கின்றனர். 20 இடங்கள் காலியாக உள்ளன. பெரும்பான்மைக்கு தேவை 113 எம்பிக்கள். பாஜ எம்பிக்கள் சிலரின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவுக்கு வந்ததால் பாஜ பலம் 86 எம்பிக்களாக குறைந்து விட்டது. பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணி பலம் 101 ஆக உள்ளது. இப்போது பாஜ பெரும்பான்மையை இழந்து விட்டது. பாஜவுக்கு தனியாகவும், கூட்டணியாகவும் பெரும்பான்மை இல்லை. இண்டி கூட்டணி எம்பிக்கள் பலம் 87 ஆக உள்ளது. இதில் காங் வசம் 26 எம்பிக்கள், மம்தாவின் திரிணமுல் காங் வசம் 13 எம்பிக்கள் உள்ளனர். திமுக, ஆம்ஆத்மி கையில் தலா 10 எம்பிக்கள் உள்ளனர். மற்ற எம்பிக்கள் எந்த கூட்டணியிலும் சேராத கட்சிகள் வசம் உள்ளனர். பாஜ கூட்டணி பெரும்பான்மையை இழந்து விட்டதால், இனி முன்பு போல் சுலபமாக சட்டம் இயற்ற முடியாது. ஒரு சட்டம் அமலுக்கு வர லோக்சபாவை போல ராஜ்யசபாவின் ஒப்புதலும் அவசியம். ஆனால் இனி பாஜவுக்கு அந்த ஆதரவு கிடைக்குமா என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. மசோதாக்களை சிக்கல் இன்றி நிறைவேற்ற பாஜவுக்கு இன்னும் 13 எம்பிக்கள் தேவை. அப்படி பார்த்தால், பாஜ கூட்டணியில் இல்லாத ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வசம் 11, அதிமுக வசம் 4 எம்பிக்கள், நவீன் பட்நாயக்கின் பிஜு தனதா தளம் கட்சியிடம் 9 எம்பிக்கள் உள்ளனர். இதற்கு முன் இந்த கட்சிகள் எல்லாம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத பாஜ கூட்டணி கட்சிகளாக இருந்து வந்தன. எந்த மசோதாவாக இருந்தாலும் கேட்காமலேயே அரசுக்கு ஆதரவு தந்து கொண்டிருந்தன. நடந்து முடிந்த லோக்சபா, சட்டசபை தேர்தல் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி விட்டது. ஒடிசா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடனான பாஜ உறவு முற்றிலும் மாறி விட்டது.