அன்புமணி தலைவர் பதவி பறிப்பு பின்னால் திமுக? Ramadoss vs Anbumani | PMK crisis | DMK | Amit Shah
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய நிறுவனர் ராமதாஸ், அவரை செயல் தலைவராக நியமித்தார். தலைவர் பதவியே நான் எடுத்துக்கொள்கிறேன். இனி நிறுவனர்+தலைவர் பதவி என்னிடமே இருக்கும் என்று ராமதாஸ் கூறினார். ராமதாசின் இந்த திடீர் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. அன்புமணி ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி போராட ஆரம்பித்தனர். கட்சி 2 துண்டாக உடைய போகிறதோ என்ற பேச்சு எழுந்தது. இந்த நிலையில் அன்புமணி பதவியை ராமதாஸ் பிடுங்கியதன் பின்னால் திமுகவின் கூட்டணி வளையம் இருக்கும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி பாமக வட்டாரம் கூறியது: தேர்தல் கூட்டணி முடிவை நிறுவனர் ராமதாஸ் எடுத்த போது, கட்சிக்கு வெற்றி கிடைத்தது. கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பின், பாமகவுடன் கூட்டணி அமைக்க, தைலாபுரம் வீட்டுக்கு, டில்லி தலைவர்களும் தமிழக தலைவர்களும் சென்று ராமதாசிடம் பேச்சு நடத்தினர். அன்புமணி கட்சி தலைவரான பின், அவரே கூட்டணியை முடிவு செய்கிறார். சென்னை வரும் அமித்ஷாவை சந்தித்து, கூட்டணியை முடிவு செய்ய அன்புமணி திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இதை ராமதாஸ், சில மாநில நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் விரும்பவில்லை. இப்போதே அமித்ஷாவிடம் கூட்டணியை உறுதி செய்தால், திமுக, அதிமுக போன்ற கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்து பேரம் பேச முடியாமல் போய் விடும். குறிப்பாக திமுக கூட்டணிக்கு போகலாம் என்ற எண்ணம் பாமக எம்எல்ஏக்களுக்கு இருக்கிறது. அதிமுக அடுத்த சாய்ஸ். திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் வெளியேறினாலும், வெளியேறவில்லை என்றாலும், பாமக இணைந்தால் வெற்றி பெற முடியும் என்று பாமக எம்எல்ஏக்களும் கருதுகின்றனர். 2021 சட்டசபை தேர்தலில், அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற, பாமக எம்எல்ஏக்கள், இப்போது திமுக உடன் நெருக்கம் காட்டுகின்றனர். அதிமுக பிரிந்திருப்பதால், அக்கட்சி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. எனவே அக்கட்சிக்கு பதில், திமுகவுடன் கூட்டணி வைக்கலாம். திமுகவில் வாய்ப்பில்லை என்றால், அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம். அதற்கு முன் பாஜ கூட்டணியில் இணைந்தால், திமுக, அதிமுக கட்சிகளிடம் மதிப்பு இருக்காது என்று பாமக எம்எல்ஏக்கள் ராமதாசிடம் கூறி இருக்கின்றனர். இது தான் சரி என்று ராமதாசுக்கும் பட்டதால் இது பற்றி அன்புமணியிடம் பேசி இருக்கிறார். சரிபட்டு வரவில்லை என்பதால் அன்புமணியின் பதவியை பறித்து விட்டார் என்கிறது பாமக வட்டாரம். தேர்தல் நேரத்தில் கட்சியில் வெடித்த இந்த பூகம்பம் கட்சியின் வெற்றி மற்றும் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், ராமதாசை சமாதானம் செய்ய முயற்சி நடக்கிறது. நேற்று மாலை தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த ராமதாஸ் மகள்கள் ஸ்ரீகாந்தி, கவிதா, பாமக செய்தித் தொடர்பாளர் பாலு, சிவகுமார் எம்எல்ஏ உள்ளிட்டோர் ராமதாசிடம் பேசினார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சி தொடர்கிறது என்று பாமக நிர்வாகிகள் கூறினர்.