முதல்வர் கருத்தால் பாமக கொந்தளிப்பு! | Ramadoss | MKstalin | PMK
அதானி விவகாரத்தில் தமிழக மின் வாரியத்தின் பெயரும் இடம் பெற்று இருப்பது குறித்து விசாரணை நடந்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி இருந்தார். இது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதானியுடன் நடந்த சந்திப்பு தொடர்பாக அமைச்சர் ஏற்கனவே உரிய பதில் அளித்துள்ளார். ராமதாசுக்கு வேறு வேலை இல்லை, தினமும் ஒரு அறிக்கை வெளியிடுகிறார். பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என ஸ்டாலின் கூறினார். ஸ்டாலினின் கோபம் குறித்து பாமக வட்டாரங்கள் கூறியதாவது ; விழுப்புரம் வழுதரெட்டியில் 21 சமூக போராளிகளுக்கான மணி மண்டபத்தை வரும் 29ல் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு ராமதாசுக்கும் அழைப்பு அனுப்பப்படும் என அமைச்சர் பொன்முடி கூறினார். ஆனால் முதலில் வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான அழுத்தத்துக்கு பதில் கொடுங்கள் என தமிழக அரசை நோக்கி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். இந்த சூழலில் அதானி விவகாரம் பெரிதாக, ஸ்டாலின் அதானியை சந்தித்தது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பி நெருக்கடி கொடுத்தார் ராமதாஸ். மணிமண்டப விழாவுக்கு அழைப்பு விடுத்தும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியதோடு, அதானி பிரச்னையை வேறு கிளப்புகிறாரே என ஸ்டாலினுக்கு கோபம் ஏற்பட்டது. இதனால் தான் பிரஸ் மீட்டில் ஸ்டாலின் பொங்கி விட்டார் என அந்த வட்டாரங்கள் கூறின.