இந்தியா, பாக் சண்டை நிறுத்தம்: மோடி மீது ரேவந்த் ரெட்டி பாய்ச்சல் Revanth Reddy Speech about Modi
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான நம் முப்படைகளின் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையை பாராட்டி, தெலங்கானா மாநிலம் நிஜாம்பேட்டில் ஜெய் ஹிந்த் யாத்திரை நடந்தது. முதல்வர் ரேவந்த் ரெட்டி உட்பட ஏராளமான காங்கிரசார் தேசிய கொடி ஏந்தி பேரணியில் பங்கேற்றனர். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் முன், பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். பயங்ரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோர் பூரண ஆதரவு தெரிவித்தனர். மத்திய அரசின் நடவடிக்கைக்கு, தெலங்கானாவின் 4 கோடி மக்கள் துணை நிற்பதாக நான் கூறினேன். தாக்குதலை துவங்கும் முன் அனைத்து கட்சி கூட்டம் கூட்டிய மோடி, யாரிடமும் கூறாமல் சண்டையை நிறுத்தியது ஏன்? இந்தியா - பாக்., சண்டை நிறுத்தம் பற்றிய தகவலை முதலில் அமெரிக்க அதிபர் வெளியிடுகிறார் என்றால் நம் பிரதமருக்கு என்ன மரியாதை? நம் நாட்டிற்குத் தான் என்ன கவுரவம்? பிரதமர் மோடி செல்லா காசாகிவிட்டார். செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டு போல அவர் உள்ளார். மோடியை நம்பி இனியும் பலன் இல்லை. துணிச்சல் மிக்க வீர மங்கை இந்திராவின் பேரன் ராகுல் நாட்டின் பிரதமரானால், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள காஷ்மீர் பகுதிகள் மீட்கப்படும். அவர் தன் பாட்டியை போல் துணிச்சலுடன் செயல்படுவார் என ரேவந்த் ரெட்டி கூறினார்.