சாவர்க்கர் விஷயத்தில் செல்வப்பெருந்தகை கருத்துக்கு பதிலடி | Selvaperunthagai | Congress state presid
சென்னையில் பாஜ சார்பில் சாவர்க்கர் குறித்த நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய பாஜ தேசிய அமைப்பு செயலாளர் பிஎல் சந்தோஷ், சாவர்க்கரின் தியாகத்தால் தான் இளைஞர்கள் பலர் விடுதலை போராட்டத்தில் பங்கேற்றதாக கூறினார். சாவர்க்கர் குறித்து பிஎல் சந்தோஷ் பேசிய கருத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்தார். பிஎல் சந்தோஷ் உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற தவறான தகவல்களை கூறியிருக்கிறார். இது ஒரு கடைந்தெடுத்த பொய்பிரச்சாரம். விடுதலை போராட்டத்தில் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் ஏஜெண்டாக இருந்த சாவர்க்கர் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை பாஜகவினரால் துடைக்க முடியாது என்றும் கூறி இருந்தார். இதற்கு தமிழக பாஜ சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரசை சேர்ந்த இந்திரா பிரதமராக இருந்தபோது 1980 மே 20ல் அவர் எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளது. அப்போதைய ஸ்வதந்திரயவீர் சாவர்க்கர் ராஷ்டிரிய ஸ்மாரக்கின் செயலாளராக இருந்த பண்டிட் பக்லேவுக்கு இந்திரா ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்தியாவின் மிகப்பெரிய சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவரான விநாயக தாமோதர் சாவர்க்கருக்கு தனது மரியாதையை தெரிவித்தார். வீர் சாவர்க்கரை இந்தியாவின் குறிப்பிடத்தக்க மகன் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். காங்கிரசார், சாவர்க்கரை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அவர்களின் முன்னாள் பிரதமர் இந்திராவின் கருத்து நேர் மாறாக இருக்கிறது.