உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பழனிசாமி - செங்கோட்டையன் பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டதா? | Sengottayan | Ex Minister | Edappadi

பழனிசாமி - செங்கோட்டையன் பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டதா? | Sengottayan | Ex Minister | Edappadi

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சரும், கோபிச்செட்டிப்பாளையம் அதிமுக எம்எல்ஏவுமான செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. சில மாதங்களாகவே இருவருக்கும் இடையேயான பனிப்போர் தொடர்வதாகவே சொல்லப்பட்டது. இருவரும் பெயரை குறிப்பிட்டு பேசுவதை தவிர்த்தனர். எடப்பாடி பழனிசாமி கூட்டும் எந்தவொரு கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்காமல் தவிர்த்தே வந்தார். பொது நிகழ்ச்சிகள், சட்டசபையில் பேசும்போது கூட பழனிசாமி பெயரை குறிப்பிடுவதை செங்கோட்டையன் தவிர்த்தே வந்தார். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சட்டசபையில் பழனிசாமி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டங்கள் நடக்கும். அதிலும் கூட செங்கோட்டையன் பங்கேற்காமலேயே இருந்தார். நேற்றிரவு கூட பழனிசாமி அனைத்து அதிமுக எம்எல்ஏக்களையும் அழைத்து தனது வீட்டில் விருந்து வைத்திருந்தார். அதிலும் செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்திருந்தார். இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் இருப்பது உறுதி என்றே பல தரப்பிலும் பேசப்பட்டது. இந்த சூழலில் தான் இன்று சட்டசபையில் யாரும் எதிர்பார்க்காத விஷயம் நடந்துள்ளது. அதாவது சட்டசபையில் இப்போது மானிய கோரிக்கை தொடர்பான விவாதம் நடக்கிறது. இன்று பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி தொடர்பான மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடந்தது. அப்போது பேசிய செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து தள்ளினார். எடப்பாடியாரை வணங்கி உரையை துவங்குவதாக குறிப்பிட்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நல்லாட்சி வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி என்றும் தெரிவித்தார். இத்தனை நாட்கள் எடப்பாடி பெயரையே குறிப்பிடுவதை தவிர்த்த செங்கோட்டையன், இன்று திடீரென இப்படி பேசியது, அதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்லாது, மற்ற கட்சி எம்எல்ஏக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பழனிசாமி - செங்கோட்டையன் இடையே இருந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்துவிட்டதாகவே பலரும் குறிப்பிடுகின்றனர்.

ஏப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை