ஜாமின் ரத்து செய்ய கோரிய வழக்கில் நீதிபதிகள் சொன்னது என்ன? | Senthil balaji case | Supreme Court
அமைச்சராக தொடர வேண்டுமா? செந்தில் பாலாஜிக்கு கோர்ட் செக்! சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் 2023 ஜூன் 14ல் கைது செய்தனர். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமின் கோரினார். அமைச்சராக இருப்பதால் ஜாமின் தரக் கூடாது என அமலாக்க துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் ஜாமின் கோரினார். 471 நாள் சிறைவாசத்துக்கு பிறகு 2024 செப்டம்பர் 26ல் சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. சிறையை விட்டு வந்த சில தினங்களில் அவர் மீண்டும் அமைச்சர் ஆனார். அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால்தான் செந்திலுக்கு ஜாமின் கொடுக்கப்பட்டது. வெளியே வந்தவுடன் அவர் அமைச்சராகிவிட்டார். அதனால் அவருக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என சென்னையைச் சேர்ந்த வித்யாகுமார் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அமலாக்க துறை வக்கீல் வாதிடும்போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைப்பதற்கு முன் வழக்கு விசாரணைக்கு தடயவியல் நிபுணர் நேரில் வந்து சாட்சியம் அளித்தார். இப்போது செந்தில் அமைச்சராக இருப்பதால் பயத்தால் வர மறுக்கிறார். அதனால் செந்தில் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் எனகூறினார். அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் கூறும்போது, செந்தில் வழக்கில் அரசு தரப்பில் மட்டும் 212 பேர் சாட்சிகளாக உள்ளனர். இந்த வழக்கின் குற்றச்சாட்டுகள் தீவிரமானது. செந்தில் அமைச்சராக இருப்பதால் அவர்கள் பயப்பட வாய்ப்பு உள்ளது. செந்தில் அமைச்சராக தொடர விரும்புகிறாரா என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். கடந்த முறையே இது குறித்து நாங்கள் அதிருப்தி தெரிவித்தோம். செந்தில் அமைச்சராக தொடர வேண்டுமா? என்பதை மாநில அரசிடம் கேட்டுச் சொல்லுங்கள். அமைச்சராக தொடர விரும்பினால் முன்னுரிமை கொடுத்து இந்த வழக்கை விசாரிக்கலாம் எனக்கூறி, வழக்கை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.