எமர்ஜென்சி பற்றிய சசி தரூர் கட்டுரையால் காங்கிரசில் மீண்டும் புகைச்சல்! | Shashi Tharoor article
எமர்ஜென்சியின் கொடூரம் கட்டுரை எழுதிய சசி தரூர்! இந்திரா, சஞ்சய் மீது விமர்சனம்! கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி எம்பியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் சமீப நாட்களாக மத்திய பாஜ அரசின் நடவடிக்கைகளை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகிறார். பிரதமர் மோடியை அடிக்கடி பாராட்டி வரும் சசி தரூர், காங்கிரசை சேர்ந்த இந்திரா பிரதமராக இருந்த போது, நாடு முழுதும் அமல்படுத்தப்பட்ட எம்ர்ஜென்சி நடவடிக்கையை விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளார். பிரபல மலையாள பத்திரிகையில் எமர்ஜென்சி குறித்த கட்டுரையில், சசி தரூர் எழுதியிருப்பதாவது: 1975 முதல் 1977 வரை இரண்டு ஆண்டுகள் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சியின் போது, மனித உரிமை மீறல்கள் நடந்தன. குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. பத்திரிகைகளின் கருத்து சுதந்திரம் முடக்கப்பட்டது. ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில், இது போன்ற அராஜகமான போக்குகளை அனுமதிக்க முடியாது. இந்திராவின் மகன் சஞ்சய், நாடு முழுதும் கருத்தடை நடவடிக்கையை தீவிரப்படுத்தினார். கிராமப்புறங்களில் கட்டாய கருத்தடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. டில்லி உள்ளிட்ட இடங்களில் ஏழைகளின் வீடுகள், குடிசைகள் இடித்து அகற்றப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்தனர். ஆனால் அவர்களின் நலனுக்காக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எமர்ஜென்சியின் போது நம் நாடு எப்படிப்பட்ட நிலையில் இருந்தது என்பதை நினைத்து பார்க்க வேண்டும். ஆனால், தற்போதைய இந்தியா 1975ல் இருந்தது போல் இல்லை. நாம் முன்பை விட அதிக தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறோம். அதிக வளர்ச்சியை எட்டியுள்ளோம். ஜனநாயகத்தை காப்பது நம் கடமை. எமர்ஜென்சி கற்றுத் தந்த பாடத்தை மறக்கக் கூடாது. எமர்ஜென்சி கால நடவடிக்கைகள் நாம் அனைவரும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது என சசி தரூர் தன் கட்டுரையில் கூறி உள்ளார். சசி தரூரின் கருத்தை கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதற்கு பதிலளித்த சசி தரூர், எமர்ஜென்சியின் போது இந்தியா எப்படி இருந்தது என்பதை உலக மக்களுக்கு தெரியப்படுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம் என கூறி உள்ளார். காங்கிரஸ் எம்பியாக இருந்து கொண்டு தொடர்ந்து அந்த கட்சியை விமர்சித்து வரும் சசி தரூரின் நடவடிக்கை, அந்த கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.