தென்கொரிய அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோல் நீக்கம் | South Korea President | Emergency
அதிபர் பதவியை பறித்த அவசர நிலை பிரகடனம் பாடம் புகட்டிய எதிர்கட்சிகள் டிசம்பர் 3ம் தேதி இரவு டிவியில் தோன்றிய தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், வடகொரிய ஆதரவாளர்களை நாட்டில் இருந்து வெளியேற்றவும், அரசுக்கு எதிரான சக்திகளை ஒடுக்கவும் அவசரநிலை ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சியில் சிலஎம்.பி.,க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக பார்லிமென்ட் கூட்டப்பட்டு, அவசர நிலையை நீக்க தீர்மானம் நிறைவேற்றியது. இதனால், சில மணி நேரங்களில் அவசரநிலை அறிவிப்பை யூன் சுக் இயோல் திரும்பப் பெற்றார். குறுகிய காலம் மட்டுமே நீடித்தாலும் யூன் அறிவித்த அவசர நிலை, நாட்டில் பெரிய அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் பதவி விலக வலியுறுத்தி, நாட்டின் பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோலை நீக்க வலியுறுத்தி, அந்நாட்டு பார்லி.,யில் கடந்த வாரம் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 300 எம்.பி.,க்கள் உடைய பார்லி.,யில், தீர்மானம் வெற்றி பெற 200 பேரின் ஆதரவு தேவை. எதிர்க்கட்சிகளின் 192 எம்.பி.,க்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்ததால், தீர்மானம் தோல்வி அடைந்தது. இருப்பினும், பல்வேறு இடங்களில் யூன் சுக் இயோலுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.