தமிழக கவர்னருக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கில் பரபரப்பு விவாதம் | supreme court | RN Ravi governor
மசோதா விஷயத்தில் அரசுக்கு கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது! கவர்னருக்கான அதிகாரங்களை குறைத்து மதிப்பிடுகிறது அரசு தமிழக அரசின் மசோதாக்களுக்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பதாகவும், ஒப்புதல் அளிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. நீதிபதிகள் பார்திவாலா, மகாதேவன் அமர்வு தொடர்ந்து 3 நாட்களாக விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையின்போது, கவர்னர் தரப்புக்கு நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர். கவர்னர் எந்த விளக்கமும் அளக்காமல் மசோதாக்களை திருப்பி அனுப்பினால், அதில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு எப்படி தெரியும் என நீதிபதிகள் கேட்டனர். கவர்னர் சார்பில் ஆஜரான அரசு தலைமை வக்கீல் வெங்கட்ரமணி பதிலளித்தார். மசோதாவை கவர்னர் ஏன் நிறுத்தி வைத்தார் என்பதற்கான விளக்கம் சுருக்கமாக இருந்தாலே போதும். கட்டுரைகளாக இருக்க வேண்டியதில்லை. அரசு அனுப்பிய துணை வேந்தர்கள் நியமன மசோதா, மத்திய அரசு சட்ட விதிகளுக்கு எதிரானது என்பதால் அதற்கு எப்படி ஒப்புதல் தருவார். அரசியல் சாசனம் பிரிவு 200ன்படியே கவர்னர் செயல்படுகிறார். ஆனால், கவர்னருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை தமிழக அரசு குறைத்து மதிப்பிட்டு இருப்பதாக தெரிகிறது. அரசு அனுப்பும் மசோதாக்கள் முறையானதாக இல்லை என்று கவர்னர் சுட்டிக்காட்டியதால்தான். அவருக்கு எதிராக இத்தகையை நிலைப்பாட்டை அரசு எடுத்திருக்கிறது எனக்கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் பல்கலைக்கழக மசோதா மத்திய சட்டத்துக்கு எதிராக இருந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்? மாநில அரசு எப்படி செயல்படும். மசோதா விவகாரத்தில் அரசுக்கு கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது என்றனர். மசோதாக்கள் 2023ல் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டும் நிலுவையில் இருப்பது ஏன். இது தொடர்பாக ஜனாதிபதி-தமிழக அரசு இடையே ஏதேனும் தகவல் பரிமாற்றம் இருந்ததா என நீதிபதிகள் கேட்டனர். பதில் அளித்த வக்கீல் வெங்கட்ரமணி, மசோதாக்கள் அனுப்பப்பட்ட 2 மாதத்தில் முடிவை தெரிவித்து விட்டார். 7 மசோதக்கள் மீதான ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார் என வக்கீல் தெரிவித்தார். கவர்னர் தனக்கு இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மசோதாக்களை நிறுத்திவைத்துவிட்டு, பிறகு அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கிறார். அதற்கு பதிலாக நேரடியாக ஜனாதிபதிக்கே அனுப்பி வைத்திருக்கலாமே என நீதிபதிகள் கேட்டனர். கவர்னர் தரப்பு வக்கீல் கூறும்போது, மசோதாக்களில் சரி செய்யக்கூடிய தவறு இருந்தால் மட்டும்தான் அரசுக்கு திருப்பி அனுப்புவார்கள். முரண்பாடுகள் இருந்தால் அனுப்ப வேண்டியதில்லை எனக்கூறினார். இன்றை வாதங்கள் முடிந்த நிலையில், திங்களன்று விசாரணை நடைபெறும் எனக்கூறிய நீதிபதிகள், அன்றைய தினம், கவர்னர் தரப்பு வாதங்கள் முடிந்த பின், அரசின் பதில் வாதங்கள் நடைபெறும். திங்களன்றே அனைத்து தரப்பு வாதங்களையும் முடித்து விடலாம் எனக்கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.