ஆதவ், ஆனந்துடன் பிரசாந்த் பேசியது என்ன? | TVK Vijay| Prashant Kishor - Vijay | Adhav Arjuna| TN
தவெக ஓட்டு சதவீதம் என்ன? பிரசாந்த் கிஷோர் அறிக்கை தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. விழுப்புரம் அருகே பிரமாண்ட மாநாட்டை நடத்திய கையோடு, தேர்தல் ஆயத்த பணிகளை தலைவர் விஜய் முடுக்கி விட்டுள்ளார். மாவட்ட நிர்வாகிகள் நியமனம், தேர்தல் பிரசார வியூகங்களை வகுத்தல் என கட்சி நடவடிக்கைகள் அடுத்தடுத்து துரித கதியில் நடந்து வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரிடம் ஆலோசனை பெற தவெக தலைமை முடிவெடுத்தது. விசிகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா அந்த கட்சியின் தேர்தல் பிரசார பொதுச் செயலாளராக உள்ளார். அவர் எடுத்த முயற்சியால், பிரசாந்த் கிஷாேர் நேற்று சென்னை வந்து, பனையூரில் விஜயை சந்தித்து பேசினார். கட்சியின் கட்டமைப்பு, கட்சிக்கான தற்போதைய ஓட்டு வங்கி, வரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசினர். மேற்கண்ட மூவரும், பிரசாந்த் கிஷோருடன் பல மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பின், பிரசாந்த் கிஷோர் சில அறிக்கைகளை அவர்களிடம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, பெண்கள், இளைஞர்களின் ஆதரவு தவெகவுக்கு உள்ளது. இப்போதுள்ள சூழலில், 15 முதல் 20 சதவீதம் வரை அந்த கட்சிக்கு சாதகமான ஓட்டு வங்கி உள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், எந்தெந்த தொகுதிகளில் தவெகவுக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது. எந்த வயதிற்கு உட்பட்டோர் இடையே விஜய்க்கு அதிக செல்வாக்கு உள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விஜய்க்கு சாதகமான மனநிலையில் உள்ள வாக்காளர்களை அப்படியே தவெகவுக்கு ஓட்டளிக்க செய்யவும், ஓட்டு வங்கியை அதிகரிக்க செய்யவும் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. பிரசாந்த் கிஷோர் அளித்த அறிக்கை மற்றும் அவர் கூறிய தகவல்களை, தவெக நிர்வாகிகள் விஜயிடம் கொண்டு சேர்க்க உள்ளனர். அதன்பிறகு, கிஷோர் ஆலாேசனைப்படி, 2026 சட்டசபை தேர்தலுக்கான வியூகம் வகுக்க தவெக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, பாஜ, திமுக, திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுக்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு, அந்த கட்சிகளை வெற்றி பெறச் செய்துள்ளார். அதை மனதில் வைத்தே தற்போது தவெக அவரை நாடியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.