AIக்கு அதிக கட்டுப்பாடுகள் தேவையில்லை : ஜேடி வான்ஸ் | US - UK | Decline to sign | Paris AI summit
AI மாநாடு கூட்டறிக்கை அமெரிக்கா, இங்கிலாந்து கையெழுத்திட மறுத்தது ஏன்? பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த ஏஐ உச்சிமாநாட்டில் இந்தியா, பிரான்ஸ், சீனா, டென்மார்க், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நியுசிலாந்து, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா உள்பட 58 நாடுகள் கையெழுத்திட்ட கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஏஐ தொழில்நுட்பம் உலகத்துக்கும் மக்களுக்கும் நலன்தருவதாக இருக்க வேண்டும். அதன்வளர்ச்சி அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், வெளிப்படையான மற்றும் நம்பகமானதாக இருக்க வேண்டும் என அந்த கூட்டறிக்கை வலியுறுத்துகிறது. பொது நலன் கருதி ஒரு தனி ஏ.ஐ. தளம் நிறுவப்பட்டு உள்ளதையும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டறிக்கையில், அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் கையெழுத்திட மறுத்துவிட்டன. ஏஐ உச்சிமாநாட்டில் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நேற்று பேசினார். ஏஐ-க்கு அதிகப்படியான கட்டுப்பாடுகள் தேவையில்லை. மாறும் தொழில் உலகத்தை அது கொன்றுவிடும். ஏஐ தொழில்நுட்பம் கருத்தியல் சார்புகள் கொண்டதாக இருக்ககூடாது. அமெரிக்காவின் ஏஐ தொழில்நுட்பம் சர்வாதிகாரமிக்க தணிக்கைகளுக்குள் இணைக்கப்படாது என அவர் கூறி இருந்தார். இதன் காரணமாகவே, 58 நாடுகளின் கூட்டறிக்கையில் அமெரிக்கா, கையெழுத்து போடவில்லை என கூறப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக உலகளாவிய நிர்வாகம் போன்ற விவகாரத்தில் கூட்டறிக்கையில் தெளிவு இல்லை என இங்கிலாந்து கையெழுத்து இடவில்லை என கூறப்படுகிறது.