வெடித்தது வர்த்தகப்போர்-முழு பின்னணி | US vs China | Trump vs Xi Jinping | trade war | canada vs US
மீண்டும் வெடித்தது வர்த்தகப்போர் அமெரிக்கா-சீனா பகிரங்க மோதல் கனடா, மெக்சிகோவையும் டிரம்ப் அலறவிட்ட அதிர்ச்சி அமெரிக்காவுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளின் பொருட்களுக்கு அதிரடியாக வரி போடுவோம் என்று அதிபராக பதவி ஏற்ற அன்றே டிரம்ப் சொல்லி இருந்தார். அடுத்த சில நாட்களிலேயே ஆட்டத்தை ஆரம்பித்தார். அவரது முதல் ஹிட் லிஸ்ட்டில் மூன்று நாடுகள் இருந்தன. பக்கத்து நாடுகளான மெக்சிகோ, கனடாவுக்கு தலா 25 சதவீதம் வரி விதித்தார். அதே போல், சீனாவில் இருந்து இறங்கும் பொருட்களுக்கு ஏற்கனவே இருக்கும் வரியுடன் சேர்த்து கூடுதலாக 10 சதவீதமும் வரி போட்டார். மூன்று நாடுகளும் கொந்தளித்தன. இதற்கு பதிலடி கொடுத்தே தீருவோம் என்று சபதம் எடுத்தன. சொன்னது போலவே அமெரிக்காவின் சில பொருட்களுக்கு கனடா 25 சதவீதம் வரி போட்டது. மெக்சிகோவும் பதிலடிக்கு தயாரானது. சர்வதேச வர்த்தக விதியை அமெரிக்கா மீறுவதாக உலக வர்த்தக அமைப்பில் சீனா முறையிட்டது. கூடவே, அமெரிக்காவின் சில வகை பொருட்களுக்கும், நிறுவனங்களுக்கும் பழிக்குப்பழியாக 10 முதல் 15 சதவீதம் வரை வரி விதித்தது சீனா. குறிப்பாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் நிலக்கரி, திரவ இயற்கை எரிவாயு போன்றவற்றுக்கு சீனா வரி போட்டது. சீனாவுக்கு அமெரிக்கா கூடுதல் வரி போட்டதற்கு காரணம் இரு நாடுகள் இடையே நடக்கும் வர்த்தக போட்டி. ஆனால் மெக்சிகோ, கனடாவுக்கு 25 சதவீத வரி போடுவதற்கு வேறு காரணத்தை டிரம்ப் சொன்னார். மெக்சிகோ, கனடாவில் இருந்து தான் சட்டவிரோதமாக நிறைய பேர் குடியேறுவதாகவும், போதை பொருள் கடத்தல் நடப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதை இரு நாடுகளும் தடுக்க வேண்டும் என்பதற்காக வரி விதிப்பதாக சொல்லி இருந்தார். பின்னர் நடந்த பேச்சு வார்த்தையில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா இடையே சமரசம் ஏற்பட்டது. உடனே இரு நாடுகள் மீதும் டிரம்ப் போட்ட 25 சதவீத வரியை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்தார் டிரம்ப். பதிலடியாக அமெரிக்கா மீது 25 சதவீதம் விதித்த வரியை கனடாவும் திரும்ப பெற்றுக்கொண்டது. இந்த நிலையில் ஒரு மாதம் முடிவு பெற்ற நிலையில் மீண்டும் டிரம்ப் தடாலடி காட்டி இருக்கிறார். ஏற்கனவே நிறுத்தி வைத்த 25 சதவீத வரியை மெக்சிகோ, கனடா மீது விதித்து உத்தரவிட்டுள்ளார். அதே போல் ஏற்கனவே சீனாவுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி போட்ட டிரம்ப், அதை இப்போது இரட்டிப்பாக்கி உத்தரவிட்டுள்ளார். அதன்படி சீன பொருட்களுக்கு ஏற்கனவே இருக்கும் வரிகளுடன் கூடுதலாக 20 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த வரி விதிப்பு நடைமுறை அமலுக்கு வந்தது. அடுத்த சில மணி நேரங்களில் பழக்குப்பழியாக அமெரிக்காவுக்கு வரி விதித்து அதிரடி காட்டியது சீனா. இந்த முறை அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் சோயா பீன்ஸ், மாட்டு இறைச்சி, பழங்கள், காய்கறிகள், பால் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதித்தது. அதே போல் அமெரிக்காவின் கோதுமை, மக்காச்சோளம், பருத்தி, கோழி இறைச்சிக்கு 15 சதவீதம் வரி போட்டது. இந்த வரி விதிப்பு உத்தரவு மார்ச் 10 முதல் அமலுக்கு வரும் என்றும் சீனா அறிவித்தது. இன்னொரு பக்கம் மெக்சிகோ, கனடாவும் அமெரிக்காவை பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்தன. அமெரிக்காவின் வரி விதிப்பில் கொஞ்சம் கூட நியாயமில்லை. போதை கடத்தில், சட்டவிரோத குடியேற்றத்தை காரணம் காட்டி அவர் வரி விதிப்பதை ஏற்க முடியாது. அமெரிக்காவுக்கு உரிய முறையில் பதிலடி கொடுப்போம் என்று இரு நாடுகளும் அறிவித்தன. முதல் கட்டமாக அமெரிக்காவின் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் பொருட்களுக்கு கனடா 25 சதவீதம் வரி விதித்தது. இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்துவிட்டது. 2ம் கட்டமாக 7 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இரும்பு, அலுமினியம், ஆட்டோமொபைல்ஸ் பொருட்களுக்கு வரி விதிப்போம் என்று கனடா அறிவித்தள்ளது. 2ம் கட்ட வரி விதிப்பு அடுத்த 3 வாரத்தில் அமலுக்கு வரும். அதன் பிறகும் அமெரிக்கா வரி விதிப்பை வாபஸ் பெறாவிட்டால் 3ம் கட்ட வரி விதிப்பை அறிவிப்போம் என்று கனடா அதிரடி காட்டி உள்ளது. ஏ, பி, சி என்று மூன்று விதமான வரி விதிப்பை அமல்படுத்தி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்போம் என்று மெக்சிகோவும் அறிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. வெள்ளை மாளிகை சம்பவத்தால் ஏற்பட்ட புயலே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் டிரம்ப் எடுத்திருக்கும் வரி விதிப்பால் வெடித்த வர்த்தக யுத்தம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.