வெளிநாட்டு சக்திகளுடன் காங்கிரஸ் கைகோர்ப்பு: வானதி | Vnathi Srinivasan | bjp mla | Donald trump |
காங்கிரசை அம்பலப்படுத்திய டிரம்ப் ராகுலுக்கு மன்னிப்பே கிடையாது மோடியை வீழ்த்த வெளிநாட்டு சதி பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் மயாமி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்த காலகட்டத்தில் இந்திய தேர்தலுக்காக அமெரிக்க அரசு நிதி 182 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு யாரையோ வெற்றிபெற வைக்க பைடன் அரசு முயற்சி செய்துள்ளது என கூறியிருக்கிறார். அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் முன்பாக, நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பு, வெளிநாடுகளில் இருந்து ஏதாவது ஒரு பெரிய பிரச்னையை கிளப்புவார்கள். ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனம், இந்தியாவைப் பற்றி, இந்திய நிறுவனங்களைப் பற்றி ஆய்வறிக்கை வெளிடுவார்கள். அதை வைத்துக்கொண்டு காங்கிரஸும், அதன் கூட்டணி கட்சிகளும் நாடாளுமன்றத்தை முடக்குவார்கள். தலைவராக இல்லாமல் காங்கிரஸை வழிநடத்தி கொண்டிருக்கும், இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக, அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார். லண்டன் உள்ளிட்ட நகரங்களில் அவர் பேசும்போது, இந்தியாவைப் பற்றி, பிரதமர் நரேந்திர மோடி அரசைப் பற்றி தவறான தகவல்களை பேசினார். இந்திய விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என்றும் பேசினார். இந்தியாவில் அரசியல் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி, இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க, அமெரிக்க பெரும் பணக்காரர் ஜார்ஜ் சோரஸ் பெருமளவில் நிதியளித்து வந்தார். இந்தச் சூழலில்தான், இந்தியாவில் வேறு யாரையோ ஆட்சியில் அமர்த்த அமெரிக்க அரசு நிதி 182 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபரே கூறியிருக்கிறார். இதன் மூலம், பிரதமர் மோடியை தோற்கடிக்க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அமெரிக்க உதவியை நாடியிருப்பது அம்பலமாகியுள்ளது. மக்களின் ஆதரவைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற முடியாமல், வெளிநாட்டு சக்திகளோடு சேர்ந்து சதித்திட்டம் தீட்டியிருக்கிறது காங்கிரஸ். இதை இந்திய மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். தேச விரோத சக்திகள் ஒவ்வொருவராக அம்பலமாகி வருகிறார்கள். மக்கள் மன்றத்தில் அவர்களுக்கு தண்டனை கிடைப்பது உறுதி என வானதி கூறியுள்ளார்.