மேற்கு வங்க சட்டசபையில் பரபரப்பு: எம்எல்ஏக்கள் அமளி துமளி | West Bengal | BJP MLA's Suspended
ஹிந்து உரிமைக்காக குரல் கொடுத்த பாஜ எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் கடந்த 3ம் தேதி வசந்த பஞ்சமி பண்டிகையை ஒட்டி, கொல்கத்தாவின் ஜோகேஷ் சந்திரா சட்டக் கல்லுாரியை சேர்ந்த மாணவிகள் கல்லுாரி வளாகத்தில் சரஸ்வதி பூஜை கொண்டாட ஆயத்தமானார்கள். அந்த மாணவிகளுக்கு கல்லுாரிக்கு வெளியே இருந்து மிரட்டல்கள் வந்தன. திரிணமுல் காங்கிரசை சேர்ந்த சிலர், உள்ளூர் ரவுடிகளுடன் சேர்ந்து சரஸ்வதி பூஜை கொண்டாட்டத்திற்கு எதிராக தங்களை மிரட்டியதாக மாணவிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, கொல்கத்தா ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட், மாணவிகள் சரஸ்வதி பூஜை செய்ய அனுமதி வழங்கியதுடன், அவர்களுக்கு உரிய பாேலீஸ் பாதுகாப்பு வழங்கவும் மம்தா பானர்ஜி அரசுக்கு உத்தரவிட்டது. எனினும், சரஸ்வதி பூஜை கொண்டாடிய மாணவிகளுக்கு மர்ம நபர்கள் மிரட்டல் தொடர்ந்தது. பாலியல் பலாத்காரம் செய்து விடுவோம் என ஆசாமிகள் மிரட்டியதாக மாணவிகள் கூறினர். மாநில கல்வி அமைச்சர் ஸ்ரீபிரத்யா பாசு கல்லூரிக்கு சென்று மாணவிகளுடன் பேச்சு நடத்தினார். எனினும், இந்த விவகாரம் மாநில அரசியலில் பெரும் பூதாகரமாக வெடித்தது. ஹிந்துக்கள் தங்கள் பண்டிகைகளை கொண்டாடக் கூட, மேற்கு வங்க அரசு அனுமதிப்பதில்லை. ஹிந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என பாஜ குற்றச்சாட்டை முன்வைத்தது. இதற்கிடையே மேற்கு வங்க சட்டசபை இன்று காலை கூடியதும், சரஸ்வதி பூஜை கொண்டாடிய மாணவிகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என, பாஜ எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். சபாநாயகர் பிமன் பானர்ஜி அதை அனுமதிக்கவில்லை. இதனால் பாஜ உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசுக்கு எதிராக கோஷங்களை முழங்கினர். இதனால், சட்டசபையில் கடும் அமளி நிலவியது. பாஜ எம்எல்ஏக்களின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சபாநாயகர் பானர்ஜி, எதிர்க் கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, அக்னிமித்ரா பால் உட்பட பாஜ எம்எல்ஏக்கள் நான்கு பேரை நடப்பு கூட்டத் தொடர் முழுவதற்கும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சட்டசபையில் நாளை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்ற உள்ளார். அவர் பேசும் போதெல்லாம் நாங்கள் சபையில் இருக்கக் கூடாது. இதுதான் மம்தாவின் எண்ணம் . இதற்கு முன் பாஜ எம்எல்ஏக்கள் நான்கு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளோம். அப்போதெல்லாம் மம்தா சட்டசபையில் உரையாற்றினார். தற்போது மீண்டும் அது நடந்துள்ளது என, பாஜ எம்எல்ஏக்கள் கூறினர். எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது, மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.