டில்லியை ஆளப்போகும் பாஜ முதல்வர் இவர்தான் who is next delhi cm | BJP vs AAP | delhi election result
டில்லி தேர்தலில் சூப்பர் ஹிட் வெற்றியை பாஜ உறுதி செய்து விட்டது. ஆம் ஆத்மி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. நியூ டில்லி தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற கெஜ்ரிவாலே தோல்வி அடைந்து விட்டார். இந்த வெற்றி மூலம் 27 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தலைநகரில் கம்பேக் கொடுத்து இருக்கிறது பாஜ. பாஜவின் இரட்டை இஞ்சின் ஆட்சி டில்லிக்கு வருவதும் உறுதியாகி விட்டது. ஆனால் யார் முதல்வர்? என்பது தான் இப்போது இருக்கும் கேள்வி. காரணம், முதல்வர் வேட்பாளர் யார் என்று சொல்லாமலேயே இந்த தேர்தலை பாஜ எதிர்கொண்டது. இப்போது வெற்றி உறுதி ஆகி விட்டதால், முதல்வர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பர்வேஷ் வர்மா அல்லது சிர்சாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும் கூட, இந்த ரேசில் 5 முக்கிய தலைவர்கள் இருப்பதை மறுக்க முடியாது. அவர்கள் யார் யார்? எதற்காக முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்பதை பார்க்கலாம். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் பர்வேஷ் வர்மா. நியூ டில்லி தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை, இந்த முறை மண்ணை கவ்வ செய்தவர் பர்வேஷ் வர்மா தான். கெஜ்ரிவாலை அவரது கோட்டையில் வைத்தே தோற்கடித்ததால், இவரது பெயர் உச்சத்துக்கு போய் விட்டது. அதுமட்டும் அல்ல, இவர் முன்னாள் டில்லி முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகனும் ஆவார். அடுத்த இடத்தில் இருப்பவர் பாஜவின் மூத்த தலைவர்களில் ஒருவரான விஜேந்தர் குப்தா. 2015, 2020 தேர்தல்களில் டில்லியை ஒன்சைடாக வென்று கெத்து காட்டியது ஆம் ஆத்மி. சவாலான அந்த தேர்தல்களில் கூட பாஜ சார்பில் ரோகிணி தொகுதியில் வென்றவர் விஜேந்தர் குப்தா. இவர் டில்லி மாநில பாஜ தலைவராகவும், சட்டசபையில் எதிர்கட்சி தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நிறைய அரசியல் அனுபவம் இருப்பதால் இவர் பெயரும் பெரிய அளவில் அடிபடுகிறது. மூன்றாவது இடத்தில் இருப்பவர் மஜிந்தர் சிங் சிர்சா. இந்த முறை ரஜவுரி கார்டன் தொகுதியில் போட்டியிட்டு, ஆம் ஆத்மியின் தன்வதியை தோற்கடித்தவர். முதல்வேர் ரேசில் இவர் முன்னியில் உள்ளார். காரணம் பஞ்சாப் தேர்தல். மஜிந்தர் சிங் சீக்கியர் என்பதால், டில்லியில் அவருக்கு முதல்வர் பதவி கொடுப்பதன் மூலம் சீக்கியர்கள் கணிசமாக வாழும் பஞ்சாபை வெல்ல முடியும் என்பது பாஜ மேலிடம் போட்ட கணக்கு. அடுத்த இடத்தில் இருப்பவர் துஷ்யந்த் கவுதம். இவர் பாஜவின் தேசிய பொதுச்செயலாளர் பதவியை வகிக்கிறார். தலித் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்குகிறார். டில்லி முழுக்க இவருக்கு நல்ல ஆதரவு உண்டு. எனவே துஷ்யந்த் கவுதம் பெயரையும் பாஜ மேலிடம் பரிசீலனை செய்து வருகிறது. ஐந்தாவது இடத்தில் இருப்பவர் ஹரிஷ் குரானா. இவர் 1993 முதல் 1996 வரை டில்லி முதல்வராக இருந்த பாஜ மூத்த தலைவர் மதன் லால் குரானாவின் மகன். இந்த முறை ஆம் ஆத்மியின் சிவ சரண் கோயலை எதிர்த்து களம் இறங்கினார். பாஜவின் டில்லி பிரிவு செயலாளராகவும், மக்கள் தொடர்பு பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் பதவி வகித்தவர். அமைப்புகளில் பல்வேறு பதவிகளை வகித்த ஹரிஷ் குரானா பெயரும் முதல்வர் ரேஸ் லிஸ்ட்டில் உள்ளது. இதுவரை பாஜ மேலிடம் எந்த முடிவும் எடுக்காததால் டில்லி முதலர் அரியணை சஸ்பென்ஸ் தொடர்கிறது.