பாஜ மாநில தலைவர் தேர்வில் பெரிய ட்விஸ்ட் Annamalai vs Nainar | who is next tn bjp chief | Amit Shah
அமைப்பு ரீதியாக தமிழக பா.ஜ.வில் 67 மாவட்டங்கள் உள்ளன. புதிய உறுப்பினர் சேர்க்கை கடந்த ஆண்டு செப்டம்பரில் துவங்கியது. நவம்பரில் கிளை அளவில் தேர்தல் நடத்தி, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து மண்டல தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தாண்டு ஜனவரியில், புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். மாநில தலைவர் பதவிக்கு ஜனவரியில் தேர்தல் நடத்தப்பட இருந்தது. டில்லி சட்டசபை தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் தாமதமானது. அண்ணாமலையே மாநில தலைவராக மீண்டும் நியமிக்கப்பட இருப்பதாக பாஜவினர் கருதிய நிலையில், அதிமுகவை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா களமிறங்கினார். அண்ணாமலையை டில்லிக்கு அழைத்து பேசிய மேலிடத் தலைவர்கள், பாஜ கூட்டணிக்கு நிபந்தனையின்றி அதிமுக உடன்பட்டால், நீங்கள் மாநில தலைவராக தொடரலாம்; இல்லை என்றால் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்தனர். இதனால் அண்ணாமலை தலைவராக தொடர்வாரா அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. அண்ணாமலைக்கு பதில் நயினார் நாகேந்திரன் அந்த இடத்துக்கு கொண்டு வரப்படலாம் என்றும் தகவல் பரவி வருகிறது. இதற்கு விடை காணும் வகையில், மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடக்கிறது. இந்த தேர்தலை நடத்த, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சென்னை வருகிறார். இதற்கிடையே தமிழக பாஜ துணைத் தலைவரும், கட்சியின் மாநில தேர்தல் அதிகாரியுமான சக்கரவர்த்தி தேர்தல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்ப மனுக்களை கட்சியின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், இன்று மதியம் 2 முதல் மாலை 4 மணி வரை விருப்ப மனுவை, மாநில தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். தமிழகத்துக்கான தேசிய தேர்தல் அதிகாரியும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி முன்னிலையில் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு நாளை தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறி உள்ளார். இந்த பரபரப்பான சூழலில் தான் அமித்ஷாவும் சென்னை வந்துள்ளார். மாநில தலைவராக யாரை கொண்டு வரலாம் என்பது பற்றி அவர் முக்கிய முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர் கூட்டணி பற்றி விஷயங்களை தான் பேசுவார். மாநில தலைவர் தேர்தலுக்கும் அமித்ஷா வருகைக்கும் தொடர்பில்லை என்று அண்ணாமலை கூறி உள்ளார். இருப்பினும் அமித்ஷா விருப்பப்படி தான் புதிய மாநில தலைவர் தேர்வு இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மாநில தலைவர் தேர்தலில் முக்கிய குழப்பம் ஒன்றும் நிலவி வருகிறது. அதாவது, தேர்தலுக்கான அறிவிப்பில், 3 பருவம் தீவிர உறுப்பினராகவும், குறைந்தது 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர்தான், மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையால் ஏற்கனவே தலைவராக உள்ள அண்ணாமலை, தலைவராக விரும்பும் நயினார் நாகேந்திரன் ஆகியோரால் போட்டியிட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றி, மாநில நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது தேவைக்கேற்ப விதிகளை தளர்த்த கட்சி தலைமைக்கு அதிகாரம் உள்ளது என்றார்.