பிரச்னையை தீர்க்க வந்தார் 2 பேர் கதையை முடித்த ராணுவ வீரர் Army man arrested soldier 2 men hacked to
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் சுந்தர் (55). இவரது வீட்டின் எதிரே வசித்து வருபவர் ராஜேந்திரன் (60). இருவருக்கும் கடந்த ஓராண்டாக நிலப்பிரச்னை இருந்து வந்தது. ராஜேந்திரனின் மகன் பார்த்திபன் (31) ராணுவ வீரராக உள்ளார். சுந்தருடன் உள்ள நிலப்பிரச்னை பற்றி ராஜேந்திரன் சொன்னார். நான் வந்து பிரச்னையை முடிக்கிறேன் என சொன்ன பார்த்திபன், விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்தார். பார்த்திபன் வந்த நாள் முதல் சுந்தர் குடும்பத்தினருடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவும் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாய்ச்சண்டை முற்றியதால் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். ஆவேசமடைந்த பார்த்திபன் வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்து, சுந்தர், அவர் மனைவி சுதா, சுதாவின் தந்தை முத்துமாயன் (70) ஆகியோரை அரிவாளாால் சரமாரி வெட்டினார். சம்பவ இடத்திலேயே முத்துமாயன் இறந்தார். படுகாயம் அடைந்த சுந்தர் (55) மற்றும் அவரது மனைவி சுதா ( 48 ) இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர். அங்கு இன்று காலை சுந்தர் இறந்தார். சுதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராணுவ வீரர் பார்த்திபன் மற்றும் அவரது தந்தை ராஜேந்திரன், தாயார் விஜயா ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சின்ன இடப்பிரச்னையில் மாமனார், மருமகன் இரண்டு பேரை ராணுவ வீரர் வெட்டிக் கொன்ற சம்பவம் தேனி மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.