பாலியல் தொல்லை பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை | Baljinder Singh | Baljinder Singh Case
பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள குளோரி அண்டு விஸ்டம் சர்ச் பாதிரியாராக இருப்பவர் பஜிந்தர் சிங். வயது 42. இவர் ஜலந்தரில் தாஜ்பூர், மொகாலியில் மஜ்ரி ஆகிய இடங்களில் இரண்டு சர்ச் நடத்தி வருகிறார். இவர் நடத்தும் பிரார்த்தனை கூட்டங்களுக்கு ஏராளமான மக்கள் வருகின்றனர். சர்ச் நிகழ்ச்சிகள் யூடியூப்பில் நேரலை செய்யப்பட்டு வருகிறது. யூடியூப் சேனலை கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் பாதிரியார் பஜிந்தர் சிங் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தந்தார் என கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி ஒரு பெண் போலீசில் புகார் கொடுத்தார். பாதிரியார் பஜிந்தர் சிங் தலைமையிலான சர்ச்சில், 2017ல் சேர்ந்தேன். அவரது மோசமான நடத்தையால் 2023ல் வெளியேறினேன். 2022ல் ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சில் உள்ள அறையில் தனியாக அமர வைத்து, என்னை பஜிந்தர் சிங் கட்டிப் பிடித்தார். என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். நான் கல்லுாரிக்கு செல்லும் போதெல்லாம், பஜிந்தர் சிங்கின் ஆட்கள் என்னை பின்தொடர்ந்து மிரட்டல் விடுத்தனர். என்னை அவர்கள் மன ரீதியாக சித்ரவதை செய்தனர் என பாதிக்கப்பட்ட பெண் புகாரில் கூறியிருந்தார். பாதிரியாருக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க 3 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை காவல் துறை அமைத்தது. மேலும் பஞ்சாப் மாநில மகளிர் ஆணையம் புகார் அளித்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. பஜிந்தர் சிங் மீது பாலியல் துன்புறுத்தல், சித்ரவதை, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது குறித்த வழக்கு ஜலந்தர் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. பாதிரியார் பஜிந்தர் சிங் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. பாதிரியார் பஜிந்தர் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட பெண் உருக்கமாக பேசியுள்ளார். பஜிந்தர் ஒரு மனநோயாளி, சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் அதே குற்றத்தைச் செய்வார். எங்கள் மீது தாக்குதல்கள் நடத்த வாய்ப்புள்ளதால், டி.ஜி.பி., எங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.