அடுத்தடுத்து 10 சொகுசு ஓட்டல்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பீதி | Bomb threats | Luxury hotels
நாடு முழுவதும் சமீப நாட்களாக விமானங்களுக்கும், விமான நிலையங்களுக்கும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. ஒவ்வொரு முறையும் எச்சரிக்கையாக விமானத்தை அவசரமாக தரையிறக்குவதால் விமான நிறுவனங்கள் கடும் இழப்பை சந்திக்கின்றன. விமானங்களை தொடர்ந்து சமீபத்தில் ஆந்திராவின் திருப்பதியில் உள்ள 4 சொகுசு ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. போலீசார் நடத்திய சோதனைக்குபின் அது வதந்தி என்பது தெரிந்தது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள மரியாட், பார்டூன், லெமன் ட்ரீ உட்பட 10 சொகுசு ஓட்டல்களுக்கு இ - மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். உங்கள் ஹோட்டல் வளாகத்தில் கருப்பு நிற பையில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்துள்ளேன். எனக்கு 46.24 லட்சம் ரூபாய் அளிக்காவிட்டால், அவற்றை வெடிக்க செய்துவிடுவேன் அந்த வளாகம் முழுதும் ரத்தக்கறை படியும். வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் முயற்சியில் ஈடுபட்டாலும், அவற்றை வெடிக்க செய்துவிடுவேன் என மெயிலில் குறிப்பிட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த ஓட்டல் நிர்வாகிகள், போலீசாருக்கு உடனே தகவல் அளித்தனர். மிரட்டல் வந்த ஓட்டல்களில், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினருடன் போலீசார் சோதனையிட்டனர். இதில், வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால், மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்தது.