சரக்கு ரயில்கள் விபத்தால் ரயில்கள் ரத்து; பயணிகள் அவதி | deraild wagons collide with another train
deraild wagons collide with another train| jharkhand train accident ஜார்கண்டில் கரைகேலா கர்சாவா Saraikela Kharsawa மாவட்டத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் அடுத்தடுத்து தடம் புரண்டன. சண்டில் ஸ்டேஷனை கடந்து சுமார் 200 மீட்டர் சென்ற சரக்கு ரயில் திடீரென தடம்புரண்டு விழுந்தது. அதன் பெட்டிகள் சிதறி பக்கத்து டிராக்கிலும் போய்விழுந்தன. அந்த சமயத்தில் பக்கத்து டிராக்கில் மற்றொரு சரக்கு ரயில் வந்துள்ளது. குறுக்கே விழுந்து கிடந்த பெட்டிகள் மீது மோதியதில், அந்த சரக்கு ரயிலும் தடம் புரண்டது. மொத்தம் 20க்கு மேற்பட்ட பெட்டிகள் சிதறி விழுந்தன. அருகே உள்ள ரோட்டிலும் ஓரிரு பெட்டிகள் உருண்டு போய் விழுந்தன. இரண்டும் சரக்கு ரயில் என்பதால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ரயில் பெட்டிகள் மற்றும் 200 மீட்டர் நீளத்துக்கு தண்டவாளங்கள் சேதமடைந்தன. ரயில்வே ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பெட்டிகளை அப்புறப்படுத்தி தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து காரணமாக அந்த வழியாக செல்ல வேண்டிய பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் வேறு மார்க்கமாக திருப்பி விடப்பட்டன. இதனால், பயணிகள் அவதி அடைந்தனர். விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடக்கிறது. ஒடிசாவில் கடந்த 2023ல் இதே போலத்தான் பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் கிட்டத்தட்ட 300 பேர் இறந்தனர்.