மனைவியை பூட்டி வைத்து விட்டு கணவன் செய்த கொடூரம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், மங்களபுரம் அடுத்த வேம்பகவுண்டன்புதூரை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ். வயது 35. ரிக் வண்டி மேனேஜர். மனைவி பாரதி. இந்த தம்பதிக்கு 1 வயது மகன், 10 வயதுக்குட்பட்ட 3 மகள்களும் உள்ளனர். நேற்றிரவு கோவிந்தராஜ் குடும்பத்துடன் ஒன்றாக சாப்பிட்டுள்ளார். பின் மனைவி பாரதி, 1 வயது மகனுடன் அறைக்கு உறங்க சென்றுவிட்டார். கோவிந்தராஜும், 3 மகள்கள் பிரக்திஷா ஸ்ரீ ரித்திகா ஸ்ரீ, தேவா ஸ்ரீ ஆகியோர் ஹாலில் தூங்கினர். அதிகாலை 3 மணியளவில் எழுந்த கோவிந்தராஜ், மனைவி உறங்கி கொண்டு இருந்த அறையை வெளிப்பக்கமாக பூட்டியுள்ளார். பின், தூங்கி கொண்டு இருந்த 3 மகள்களையும், அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்தார். அலறல் சத்தம் கேட்டு எழுந்த தாய் பாரதி, அறையின் கதவு பூட்டப்பட்டு இருந்ததை பார்த்து பதறினார். கதவை தட்டியபடி உள்ளிருந்து கூச்சலிட்டார். கோவிந்தராஜ் கதவை திறக்கவில்லை. 3 மகள்களையும் கொன்ற அவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பெட்ரூமில் இருந்து பாரதி கூச்சலிட்டபடி இருந்தார். அதன்பின், அங்கிருந்த மாற்று சாவியை தேடி கதவை திறந்து வெளியே வந்து பார்த்தபோது, மகள்களும், கணவரும் இறந்து கிடந்ததை பார்த்து கதறிஅழுதார். மங்களபுரம் போலீசார் 4 பேர் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். கோவிந்தராஜ், தொழில் மற்றும் வீட்டுக்காக 20 லட்சம் கடன் வங்கி இருப்பதாகவும், அதை கட்ட முடியாமல் விரக்தியில் இருந்த அவர், இந்த கொடூர முடிவை எடுத்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. நாமக்கல் எஸ்பி விமலா, ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.