வடசென்னை ரவுடி ஆகாஷ் வெட்டி சரிக்கப்பட்ட பயங்கரம் north chennai rowdy akash case | vada chennai case
ென்னை திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் என்ற குள்ளபேடா வயது 20. பிரபல ரவுடி. வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வந்த ரவுடி ஆகாஷ், 2 மாதம் முன்பு தான் இந்த ஏரியாவுக்கு வந்தார். கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி என ஆகாஷ் மீது 17 வழக்குகள் உள்ளன. ஏப்ரல் மாதம் 21ம் தேதி கொலை முயற்சி வழக்கு ஒன்றில் ஆகாசை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது வழுக்கி விழுந்ததில் ஆகாஷ் கால் முறிந்தது. விசாரணை கைதியாக சிறையில் இருந்த ஆகாஷ், ஒரு மாதம் கழித்து கடந்த 22ம் தேதி ஜாமினில் வெளியே வந்தார். வெளியே வந்த பிறகும் கால் சரியாகவில்லை. அவருக்கு எதிரிகள் அதிகம் என்பதால், வெளியே போனால் விபரீதம் ஏற்படும் வாய்ப்பு இருந்தது. இதனால் ஆகாசை வெளியே விடாமல் வீட்டிலேயே வைத்து பாதுகாத்தார் அவரது தாய் ஜெயா. தான் எப்போது வெளியே சென்றாலும் கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு செல்வது ஜெயா வழக்கம். அப்போது தான் வீட்டில் யாரும் இல்லை என்று நினைப்பார்கள் என்று ஜெயா கருதினார். நேற்று இரவு 9 மணி இருக்கும். வழக்கம் போல் மகனை உள்ளே வைத்து பூட்டி விட்டு கடைக்கு புறப்பட்டார். ஜெயா போனதும் அரிவாளுடன் வீட்டுக்கு வந்த ஒரு கும்பல், கதவை உடைத்து உள்ளே போனது. பதறிப்போன ரவுடி ஆகாசை வீட்டுக்குள் வைத்தே சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆகாஷ், சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். அவர் இறந்ததை உறுதி செய்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த கொலை நடந்த போது எந்த சத்தமும் வெளியே கேட்கவில்லை. சில நொடிகளில் காரியத்தை கச்சிதமாக முடித்தது அந்த கும்பல். கடைக்கு போன ஜெயா மீண்டும் வீட்டுக்கு வந்தார். கதவு உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியுடன் உள்ளே போனார். ஆகாஷ் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்தார். அதை பார்த்து கதறி அழுதார். போலீசுக்கு கதவல் சொன்னார். ரவுடியின் சடலத்தை கைப்பற்றி திருவொற்றியூர் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். முன்பகை காரணமாக பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததை உறுதி செய்தனர். ஆகாஷ் 22ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்ததை அறிந்த அந்த கும்பல் தினமும் நோட்டம் பார்த்து வந்தது. அப்போது தான் ஆகாசை வீட்டுக்குள் வைத்தே ஜெயா பூட்டி விட்டு செல்வதை கண்டது. எனவே தான் நேற்று ஜெயா வெளியே போன சில நிமிடங்களில் ஆகாசை கொலை செய்ய முடிந்தது. முதல் கட்ட விசாரணைக்கு பிறகு 5 பேரை போலீசார் கைது செய்தனர். எதற்காக ஆகாஷ் பழி வாங்கப்பட்டார் என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.