திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து | RDO car accident | Musiri Woman RDO died | Tric
திருச்சி மாவட்டம் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா, வயது 54. இன்று காலை அலுவல் பணி காரணமாக முசிறியில் இருந்து திருச்சிக்கு அரசு ஜீப்பில் புறப்பட்டார். காரை, திருச்சி துறையூரை சேர்ந்த பிரபாகரன் ஓட்டினார். திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார், ஜீயபுரம் அருகே கடியாக்குறிச்சி பகுதியில் வந்தபோது திடீரென டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த பஸ் மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை இடதுபக்கமாக திருப்பியதாக தெரிகிறது. இருப்பினும் பஸ் மீது மோதிய கார், அதே வேகத்தில் சாலையின் பக்கவாட்டில் நின்றிருந்த ஜேசிபி மீதும் மோதி உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில் முன்சீட்டில் இடதுபுறம் அமர்ந்திருந்த கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா அதே இடத்தில் பலியானார். டிரைவர் பிரபாகரன் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்த ஜீயபுரம் போலீசார் தேவசேனா உடலை மீட்டதுடன், காயமடைந்த டிரைவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். திருச்சி - கரூர் சாலையில் முக்கொம்பு வரை சாலை அகலப்படுத்தும் பணி ஆண்டுக்கணக்கில் நடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி இறந்துள்ளனர். இதனால் ஜீயபுரம் துவங்கி பெட்டவாய்த்தலை வரை அதிக விபத்துகள் நடக்கும் பகுதியாக பிளாக் ஸ்பாட் என்று சொல்லும் அளவுக்கு மாறி உள்ளது. அதிவேகம், அஜாக்கிரதையால் விபத்துகளும், மரணங்களும் இந்த சாலையில் தொடர்கதையாகி உள்ளன. இப்போது விபத்தில் சிக்கி இறந்த கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா மதுரையை பூர்வீகமாக கொண்டவர். ஓராண்டுக்கு முன்பு தான் முசிறி ஆர்டிஓவாக பொறுப்பேற்றுள்ளார். எந்த வித பிரச்சினைகளிலும் சிக்காத இவர், அனைத்து தரப்பினரிடமும் நற்பெயரை சம்பாதித்தவர் என்று கூறப்படுகிறது.