குமரியில் லஞ்ச வேட்டை: 2 பெண் அரசு ஊழியர்கள் கைது VAO and Assistant | Bribe | Vigilance officers|
கன்னியாகுமரி மாவட்டம், தலக்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் VAO-வாக வேலை செய்பவர் அமலராணி. பேபி என்பவர் அவருக்கு உதவியாளராக பணி புரிகிறார். இரணியல் அருகே புதுவிளை பகுதியைச் சேர்ந்த கட்டட ஒப்பந்தக்காரர் ஆறுமுகம் என்பவர் விஏஓ அமலராணியை சந்தித்து தனது வீட்டுக்கு சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்கும்படி கோரினார். அவரிடம் அமலராணி 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தரும்படி கேட்டுள்ளார். இருவருக்கும் நடந்த பேர பேச்சுவார்த்தையில் 3 ஆயிரம் ரூபாய் கொடுக்க ஆறுமுகம் ஒப்புக்கொண்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க மனமில்லாத ஆறுமுகம் நாகர்கோயிலில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து அறிந்து கொண்ட அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர். ஆறுமுகத்திடம் 3 ஆயிரம் ரூபாயை வாங்கி, அதில் ரசாயன பொடிகளை தூவி, அந்த பணத்தை விஏஓ அமலராணியிடம் கொடுக்கும்படி கூறினர். ஒப்பந்தக்காரர் ஆறுமுகம் ரசாயனம் தடவிய பணத்துடன் விஏஓ அலுவலகம் சென்றார். பணம் ரெடியாக உள்ளதை அமலராணியிடம் கூறினார். உதவியாளர் பேபியிடம் பணத்தை கொடுக்க அமலராணி கூறியதை அடுத்து, ஆறுமுகம் பேபியை சந்தித்து 3 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தார். அதை பேபி வாங்கும்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக பேபி மற்றும் விஏஓ அமலராணி இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து விஏஓ அலுவலகத்தில் சோதனை நடத்தி சில ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர்.