உர கம்பெனி உரிமையாளர் மீது பெண்கள் பகீர் குற்றச்சாட்டு | Viluppuram | Viluppuram Factory
விழுப்புரம் காணை கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம், வயது 55. அங்குள்ள முத்தாம்பாளையம் ரோட்டில் உர கம்பெனி வைதுள்ளார். விழுப்புரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் அங்கே வேலை செய்கின்றனர். தனது கம்பெனியில் பணியாற்றும் பெண்களை அப்துல் ஹக்கீம் அவ்வப்போது சீண்டி வந்துள்ளார். சமீபத்தில் வேலைக்கு சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஆபாசமாக பேசி உள்ளார். வியாழனன்று மாலை அந்த பெண் தனி அறையில் வேலை செய்தார். அங்கே சென்ற அப்துல் ஹக்கீம் அவருக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்துள்ளார். பெண்ணை கீழே தள்ளி தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அலறல் சத்தம் கேட்டு சக பணியாளர்கள் ஓடி வந்தனர். பாதிக்கப்பட்ட பெண் அப்துல் ஹக்கீம் செய்த அசிங்கத்தை சொல்லி அழுதுள்ளார். இது குறித்து பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது. ஆத்திரம் அடைந்த பணியாளர்கள் கம்பெனி கேட் முன் அமர்ந்து மறியல் செய்தனர். அப்துல் ஹக்கீமை மடக்கிப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். அவரை அழைத்து சென்ற போலீஸ் ஜீப் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண் தவிர இன்னும் சில பெண்களிடமும் அப்துல்ஹக்கீம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். கடந்த சில நாட்களாக ஆபாச மெசேஜ் அனுப்பி வந்துள்ளார் என அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து விழுப்புரம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அப்துல்ஹக்கீமிடம் விடிய விடிய விசாரணை நடந்தது. பாலியல் தொந்தரவு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.