மகனை காதலி வீட்டார் கொன்றுவிட்டதாக தந்தை புகார் | Young boy hanged | Lover home | Kulasekaram | Nai
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவு விளை காலணியை சேர்ந்த துரைசாமி - தனலெஷ்மி தம்பதியின் மகன் தனுஷ், வயது 23. பள்ளியில் படித்தபோது குலசேகரம் கல்வெட்டாங்குழியை சேர்ந்த சபீனா என்ற பெண்ணை காதலித்து வந்து உள்ளார். பின் கல்லூரி படிப்பிற்காக தாயுடன் கோவை சென்றார். அங்கு கல்லூரி படிப்பை முடித்தாலும் சபீனா உடன் காதல் நீடித்து உள்ளது. இதற்கிடையே சபீனாவிற்கு திருமண வரன் பார்ப்பதை தெரிந்து காதல் விவகாரத்தை வீட்டில் சொல்லிய தனுஷ், உறவினர்கள் மூலம் பல முறை சபீனாவை பெண் கேட்டுள்ளார். ஆனால் வேறு ஜாதி, மதம் என்பதால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை சபீனா வீட்டின் மொட்டை மாடியில் தனுஷ் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். தன் மகன் மதம் மாறுவான் என்று சொல்லியும் கூட பெண் வீட்டார் சம்மதிக்காமல் நாங்கள் தாழ்ந்த ஜாதி என்பதால் அவனை கொலை செய்து விடுவோம் என மிரட்டினர். மிரட்டியதுபோலவே கொலை செய்து விட்டார்கள்; என் மகன் சாவுக்கு நீதி வேண்டும் என தனுஷின் தந்தை துரைசாமி கதறினார். குலசேகரம் இளைஞர் தனுஷ், அவர் காதலித்த பெண்ணின் வீட்டு மாடியிலேயே தூக்கிட்டிருப்பது மிகுந்த சந்தேகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அந்த பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் திமுகவில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளதால், இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நல்ல முறையில் கல்வி கற்று, ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர், தான் காதலிக்கும் பெண்ணின் வீட்டிலேயே தூக்கிட்டுக் கொண்டார் என்பது நம்பும்படியாக இல்லை. கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் சீர்குலைந்து போயுள்ள சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. குறிப்பாக, பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் இந்த ஆட்சியில் தான் கொடூர உச்சங்களை தொட்டிருக்கிறது. எனவே இவ்வழக்கில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் முறையான பிரேத பரிசோதனை செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.