கேலி செய்ததை தட்டி கேட்டவர்களை ஓட ஓட விரட்டி அடித்த கும்பல் | Youth teasing problem | Ramanathapuram
ராமநாதபுரம் மாவட்டம் இலந்தைக்கூட்டம் அடுத்த பழனிவலசை கிராமத்தை சேர்ந்த இலக்கியா, தினேஷ் இருவரும் கடந்த 14ம் தேதி இரவு தனி தனியே டூவீலரில் பேசிக்கொண்டே அவ்வழியாக கடந்து சென்றனர். அப்போது அதே ஊரை சேர்ந்த லோகேஷ், உச்சிப்புள்ளி பகுதியை சேர்ந்த சந்துரு, அஜய் ஆகிய மூவரும் இலக்கியா, தினேஷை கேலி செய்ததாக சொல்லப்படுகிறது. அவர்களை பழனிவலசை பஸ் ஸ்டாப்பில் அமர்ந்திருந்த உதயகுமார், லோகநாதன் இருவரும் தட்டி கேட்டுள்ளனர். இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஊர் மக்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஆத்திரம் அடங்காத மூவரும் நேற்று இரவு மீண்டும் திரும்பி வந்தனர். அன்று அவர்களை தட்டிக்கேட்ட உதயகுமார், லோகநாதன் இருவரும் பழனிவலசை பஸ் ஸ்டாப்பில் அமர்ந்திருந்தனர். இந்த முறை 4 டூ வீலரில் வந்த 8 பேர் கும்பல் 2 பேரையும் கண்மூடித்தனமாக தாக்கிய சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.